மேலும் செய்திகள்
பருவமழை துவங்கப்போகுது அணைகளில் கண்காணிப்பு
14-Oct-2025
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. இவற்றில், மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியாறு உள்ளிட்ட 15 அணைகள் அதிக கொள்ளளவு உடையவை. இவற்றின் வாயிலாக, பல்வேறு மாவட்டங்களின் பாசனம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பல அணைகள், வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்வாதாரமாக உள்ளன. வடகிழக்கு பருவமழை மெல்ல தீவிரம் அடைந்து வருவதால், பல அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அவற்றின் கொள்ளளவும் உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, சேலம் - மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 10,374 கன அடி; ஈரோடு - பவானிசாகர் அணைக்கு 10,588; தேனி முல்லை பெரியாறு அணைக்கு 11,892; வைகை அணைக்கு 5,516; திருவண்ணாமலை - சாத்தனுார் அணைக்கு 1,875 கன அடி நீர்வரத்து கிடைத்தது. கோவை - பரம்பிக்குளம் அணைக்கு 1,757; திருப்பூர் - திருமூர்த்தி அணைக்கு 2,402 கன அடி நீர்வரத்து கிடைத்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில், அவற்றை கண்காணிக்கும் பணியில் நீர்வளத்துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். மணிக்கு ஒரு முறை, நீர் வரத்தை கணக்கிட்டு, சென்னையில் உள்ள பருவமழை அணைகள் கட்டுப்பாட்டு மையத்திற்கு, தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
14-Oct-2025