மூச்சு வாங்கும் பழைய பம்ப் மோட்டார்களால் தண்ணீர் தட்டுப்பாடு; மின் செலவு அதிகரிப்பு
சென்னை:நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள, கூட்டுக்குடிநீர் திட்ட மோட்டார்களால், குடிநீர் தட்டுப்பாடு மட்டுமின்றி, மின் செலவும் அதிகரித்து வருகிறது.காவிரி, பாலாறு, பெண்ணையாறு, தாமிரபரணி, கொசஸ்தலையாறு உள்பட, மாநிலம் முழுதும் உள்ள பல்வேறு ஆறுகளின் நீராதாரங்களை பயன்படுத்தி, உள்ளாட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில், கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பராமரிப்பு பணி
இப்பணியை, சென்னையை தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் தமிழக குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுதும், 548 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இங்கு நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, குறைந்த விலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. அவை பொது மக்களுக்கு குடிநீராக வினியோகிக்கின்றன.கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகளுக்கு, ஆண்டுதோறும், 200 கோடி ரூபாய்க்கு மேல் அரசால் வழங்கப்படுகிறது. இதில், 60 சதவீதம் மின் கட்டணத்துக்கு செலவிடப்பட்டு வருகிறது. பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களில், 30 முதல், 50 ஆண்டுகளாக, பம்ப் மோட்டார்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் நீர் இழுப்பு திறன் வெகுவாக குறைந்துள்ளது. பல மணி நேரம் மோட்டார்களை தொடர்ந்து இயக்கினால் மட்டுமே, நீர்த்தேக்க தொட்டிகளை நிரப்ப முடிகிறது.இதனால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலுார், நாமக்கல், கரூர், திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், போதிய அளவில் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கோடை காலத்தில் நீர் கிடைக்காமல், மக்கள் தவித்து வருகின்றனர். மின் பயன்பாடு அதிகரித்து வருவதால், குடிநீர் வாரியத்திற்கு செலவும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, மின் வாரியத்திற்கு, 300 கோடி ரூபாய்க்கு மேல் கட்டண பாக்கி வைக்கப்பட்டு உள்ளது. எகிறும் வாய்ப்பு
மோட்டார்கள் இயக்கம் அதிகரித்து வருவதால், மின் பயன்பாடு கோடை காலம் முடிவதற்குள் மேலும் அதிகரித்து, நிலுவை கட்டண தொகை எகிறும் வாய்ப்பு உள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்கான கட்டணத்தை, 400 கோடி ரூபாய்க்கு மேல் வழங்காமல், உள்ளாட்சி அமைப்புகள் நிலுவை வைத்துள்ளன.இதனால், கடும் நிதி நெருக்கடியில் குடிநீர் வாரியம் தள்ளாடி வருகிறது. கோடை கால குடிநீர் தேவைக்கு ஒதுக்கப்படும் சிறப்பு நிதியையும், அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இதனால், செயல்பாட்டில் உள்ள பழைய மோட்டார்களை மாற்றி அல்லது தற்காலிகமாக சீரமைத்து, கூட்டு குடிநீர் திட்ட செயலாக்கத்தை சீராக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.