மதங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் நவாஸ் கனி எம்.பி., பேட்டி
அவனியாபுரம்:'திருப்பரங்குன்றத்தில் இரு மதங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட பேச்சு நடத்த நாங்கள் தயார்' என நவாஸ் கனி எம்.பி., தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: மலை மீது உள்ள தர்காவிற்கு, ஆடு கோழிகளை எடுத்துச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டு இருப்பதை அடுத்து, மதுரை போலீஸ் கமிஷனரை சந்தித்து விட்டு, தர்காவிற்கு செல்பவர்களுக்கு எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஆய்வு செய்வதற்காக தான் அங்கு சென்றோம்.சமைத்த உணவை கொண்டு செல்வதற்கு அனுமதி உண்டு.அங்குள்ள தர்கா, வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது. மணப்பாறை எம்.எல்.ஏ., அப்துல் சமது, வக்ப் வாரிய உறுப்பினர்; நான் தலைவர்.அந்த தர்காவிற்கு செல்லக்கூடியவர்களுக்கு என்னென்ன வசதி குறைபாடு உள்ளது என கேட்டு தெரிந்து, அதை அரசிடம் தெரிவிக்கும் பொறுப்பு எங்களிடம் உள்ளது.தர்காவிற்கு செல்பவர்கள் பிரியாணி சாப்பிடுகின்றனரா, சைவம் சாப்பிடுகின்றனரா என்று, இவர்கள் ஏன் கேட்கின்றனர்? அவர்களுடைய கோவிலுக்கு போகவில்லை; கோவில் வளாகத்திற்கு செல்லவில்லை. போலீசார் ஆடு, கோழிகளை கொண்டு செல்லத்தான் தடை, சமைத்த சாப்பாடு கொண்டு செல்வதற்கு தடையில்லை என்றனர். அவர்கள் சாப்பிட்ட புகைப் படத்தை பகிர்ந்தனர்; இது, காவல்துறை அனுமதித்த செயல்.நாங்கள் கைது செய்யப்பட வேண்டும் என, பா.ஜ., பிரமுகர் எச்.ராஜா கூறியுள்ளார். ஒரு எம்.எல்.ஏ., - எம்.பி., ஆய்வு செய்யக்கூடாது என்று சொல்வதற்கு இவர்கள் யார்?சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா போன்றவர்களை கைது செய்ய வேண்டும். இப்பிரச்னையில் இரு மதங்களிடையே மத நல்லிணக்கம் ஏற்பட பேச்சு நடத்த நாங்கள் தயார்.இவ்வாறு அவர் கூறினார்.