உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடுதல் தொகுதிகள் கேட்டுள்ளோம் இ.கம்யூ., எம்.பி., சுப்பராயன் தகவல்

கூடுதல் தொகுதிகள் கேட்டுள்ளோம் இ.கம்யூ., எம்.பி., சுப்பராயன் தகவல்

சென்னை: ''கடந்த முறையை விட, இம்முறை கூடுதல் தொகுதி ஒதுக்கும்படி கேட்டுள்ளோம்,'' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., சுப்பராயன் தெரிவித்தார்.தி.மு.க., கூட்டணியில், லோக்சபா தேர்தலுக்கு, தொகுதி பங்கீடு குறித்து பேச, கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தி.மு.க.,வில் அக்கட்சி பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில், அமைச்சர்கள் நேரு, பெரியசாமி, பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.பி.,க்கள் ராஜா, திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடான பேச்சுவார்த்தை, தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், நேற்று மாலை நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அக்கட்சி எம்.பி., சுப்பராயன், மாநில துணைச் செயலர் வீரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., சுப்பராயன் அளித்த பேட்டி:தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை துவங்கியது. துவக்கம் மிக நன்றாக இருந்தது. அவர்களிடம் இணக்கமான அணுகுமுறையை பார்த்தோம். எனவே, நல்லதே நடக்கும். நல்ல முடிவு கிடைக்கும். பிற விஷயங்கள் சொல்கிற அளவு இன்னும் முடிவுக்கு வரவில்லை.எந்த தொகுதியை கேட்டோம் என்பதை, இங்கு பகிர்ந்து கொள்ள முடியாது. கடந்த முறையை விட கூடுதல் தொகுதி கேட்டுள்ளோம். லோக்சபா சீட் குறித்து பேசினோம். ராஜ்யசபா குறித்து பேசவில்லை. எவ்வளவு தொகுதி தேவை என கொடுத்துள்ளோம். அது எத்தனை என்று சொல்லும் நிலை தற்போது இல்லை. முதல்வர் 7 ம் தேதி வருகிறார். அவர் வந்த பிறகு தேதி தீர்மானிக்கப்பட்டு, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடரும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கடந்த தேர்தலில், திருப்பூர், நாகப்பட்டினம் தொகுதிகளில் போட்டியிட்டது. இம்முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன், இன்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

K.Ramakrishnan
பிப் 04, 2024 23:49

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் இருந்துதான் 2 எம்.பி.க்கள். அகில இந்திய அளவில் வேறு எந்த மாநிலத்திலும் அந்த கட்சிக்கு எம்.பி. கிடையாது. அந்த கட்சி இருக்குன்னு காண்பிக்க வைத்ததே தி.மு.க. தயவு தான்.. இவங்க எல்லாம் கூடுதல் சீட் கேட்கிறாங்கன்னா.... அந்த அளவுக்கு தி.மு.க. பலவீனமான கட்சின்னு நினைக்கிறாங்க.. மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மே.வங்கத்திலேயே சீரோ.. கேரளாவில் ஓரிடம். தமிழ்நாட்டில் இரு இடம். இவங்களுக்கும் கூடுதல் சீட்வேண்டுமாம். தி.மு.க. அணியில் இருந்து கொண்டே அரசை எதிர்த்து போராட்டம் நடத்துறாங்க.. இப்ப அ.தி.மு.க. பக்கமும் பேசுறாங்க.. இந்த இரட்டை வேடதாரிகளை தி.மு.க. தலைமை நம்பக் கூடாது. பேசாம இவங்களை வெ ளியேற்றி விட்டு, தி.மு.க. வேட்பாளர்களையே நிறுத்துங்க... மிரட்டுகிற காங்கிரசையும் விரட்டுங்க... ஆளே இல்லாத வைகோ... தன் மகனுக்கும் சீட் கேட்கிறார். தி.மு.க. ஜெயித்த காஞ்சிபுரத்தை கேட்கிறார். அதுவும் அவங்க சின்னத்துல நிற்பாராம். தனக்கு வேற ராஜ்யசபா சீட் வேண்டும் என்கிறார்.இதெல்லாம் நியாயமா? எவ்வளவு சுமையைத்தான் தி.மு.க. தொண்டர்கள் மீது ஏற்றுவீர்கள்...தோழமை கட்சிகளுக்கு சீட்டும் கொடுத்து,செலவுக்கு கோடிகளில் பணமும் கொடுப்பதை தி.மு.க. காரர்களுக்கு கொடுங்கள்.. நிச்சயம் நாற்பதையும் ஜெயித்து காட்டுவார்கள்.


jayvee
பிப் 04, 2024 12:30

அதாவது இந்த முறையும் அதே இரண்டு தொகுதிகள்தான் . ஆனால் ஐம்பது கோடி.. என்று அர்த்தம்..


கண்ணன்
பிப் 04, 2024 06:33

ஹி ஹி ஹி சென்ற முறை என்ன தொகுதிக்குச் செய்தீர்கள்? உண்டியல், தேவையற்ற கொடிபிடித்தல் என்ற பாமரத்தனமான செயல்களைத்தவிர….


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ