தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம்: ஆவின் தொழிற்சங்கம் அறிவிப்பு
சென்னை: 'கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய தி.மு.க.,வுக்கு, ஓட்டு போட மாட்டோம்' என, தமிழ்நாடு ஆவின் தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்க மாநில பொதுச்செயலர் ராஜசேகர் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: கடந்த 2023 முதல் 2025 வரையிலான, அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்குதல், 10 ஆண்டுகளுக்கு மேல், தினக்கூலி முறையில் பணி செய்வோருக்கு பணி நியமனம் வழங்குதல், தொழிலாளர்களுக்கு கேன்டீன் முதல் கழிப்பறை வரை, என எந்த அடிப்படை வசதியையும் முறையாக செய்து தரவில்லை. இதனால், அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து, ஜன., 9ம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அப்போது கூட, ஆவின் தரப்போ, தமிழக அரசு தரப்போ, எங்களுடன் பேச்சு நடத்தாமல் புறக்கணித்தனர். அதனால், வரும் தேர்தலில் ஆவின் ஊழியர்கள், தி.மு.க.,வுக்கு ஓட்டு அளிக்க மாட்டோம். கடந்த 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஆவின் பால் விலை, லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. அதனால் தான், ஆவின் நிர்வாகத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது என்கின்றனர். தற்போது, தி.மு.க., வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில், பால் உற்பத்தியாளர்களுக்கு, லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என, தெரிவித்துள்ளனர். அவ்வாறு விலையை உயர்த்தி வழங்க வேண்டுமானால், பால் விற்பனை விலையை உயர்த்த வேண்டும். இது மக்களை ஏமாற்றும் முயற்சி. எனவே, வரும் தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.