| ADDED : டிச 06, 2024 06:56 AM
கடலுார் : தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கடலுாரில் அளித்த பேட்டி: கடலுாரில் 100 ஆண்டு கள் காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் குறித்த முன்னறிவிப்பு மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து முதல்வரிடம் விவாதிப்போம். 2,000 ரூபாய் நிவாரணம் போதாது. வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கவும், சேதமடைந்த பொருட்களை அரசு வாங்கிக் கொடுக்கவும் காங்., அறிவுறுத்தும். சட்ட சபையில் காங்., சார்பில் கேள்வி எழுப்புவோம். இயற்கை சீற்றத்தால் மக்கள் வேதனையில் உள்ள நிலையில், இதில் அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது. அமைச்சர் மீது சேற்றை வீசியது பா.ஜ.,வை சேர்ந்தவர்கள். சாத்தனுார் அணை திறப்பது, தமிழக அரசின் முடிவு தான். அதை திறந்து விட்டது தவறு தான். அங்குள்ள பொதுப்பணித் துறை பொறியாளர், நீர்வளத் துறை அமைச்சர் ஆகியோர் என்ன செய்தனர் என்ற கேள்விகளை நாங்கள் கேட்க உள்ளோம். யார் தவறு செய்தாலும் கட்டாயம் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர்.துாத்துக்குடி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வெள்ள பாதிப்பிற்கு நிவாரணமாக 29,000 கோடி ரூபாயை மத்திய அரசிடம், மாநில அரசு கேட்டது. தமிழகத்தில் அரசியல் செய்யும் அண்ணாமலை அதை மீட்டுத் தரவில்லை. மதுரையில் பிறந்த நிர்மலா சீதாராமன் அதில் 1,000 கோடி ரூபாய் கூட கொடுக்கவில்லை. இப்போது 2,000 கோடி ரூபாய் தமிழக அரசு கேட்டுள்ளது. அதில், முதலில் 1,000 கோடி ரூபாயை தர, பிரதமரிடம் அண்ணாமலை வலியுறுத்த வேண்டும்.தற்போது ஏற்பட்டுள்ள புயல், மழை வெள்ளத்தை பேரிடராக அறிவித்து மத்திய அரசு 100 சதவீதம் நிவாரண நிதி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.