ஈர நிலங்கள் பாதுகாப்பு: முதல்வர் ஸ்டாலின் உறுதி
சென்னை: 'ஈர நிலங்களை பாதுகாப்பதில், தமிழக அரசு உறுதியாக உள்ளது' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:
உலக ஈர நிலங்கள் தினமான நேற்று, ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மற்றும் தேர்தங்கல் பறவைகள் சரணாலயங்கள், புதிய ராம்சார் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இச்செய்தியை பகிர்வதில் மகிழ்ச்சி. இத்துடன் தமிழகத்தில் உள்ள ராம்சார் பகுதிகளின் எண்ணிக்கை, இந்தியாவிலேயே மிக அதிகமாக, 20 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில், 19 இடங்கள், 2021ல் தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் துவங்கிய பின், ராம்சார் பகுதிகளாக அறிவிக்கப்பட்டவை.ஈர நிலங்களை பாதுகாப்பதில், தமிழக அரசு உறுதியாக உள்ளது. வளமான நம் இயற்கை மரபை காக்க, மேலும் பல ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.