சென்னை : அரசியல் கட்சித் தலைவர்களின், 'ரோடு ஷோ' மற்றும் பொதுக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் போது, பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு விதிமுறைகளை, 10 நாட்களுக்குள் வகுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்படுவதால், பாரபட்சமின்றி பிரசாரத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்கட்சி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 'டிபாசிட்'
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 'அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களால் ஏற்படும் சேதங்களால் பலர் பாதிக்கப்படுகின்றனர். 'அத்தகைய கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் முன், அரசியல் கட்சிகளிடம் டிபாசிட் தொகை வசூலிப்பது குறித்து, விதிமுறைகளை வகுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இதையடுத்து, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஏராளமானோர் கூடுவதை கட்டுப்படுத்தவும், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ மற்றும் பேரணி உள்ளிட்டவற்றுக்கு நிலையான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்கக்கோரி, துாத்துக்குடியைச் சேர்ந்த திருகுமரன் உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
உத்தரவாதம்
இந்த மனுக்கள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''நிலையான வழிகாட்டு விதிகள் வகுக்கும் வரை, எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ''வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்தாலோசனை நடத்தி வருகிறோம்,'' என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'விதிமுறைகளை வகுக்கும் வரை, எந்த கட்சிக்கும் அனுமதி வழங்கப்படாது என மாநில அரசு கூறுவது, அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பது போல் ஆகாதா; எந்த அடிப்படையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது' என கேள்வி எழுப்பினர்.
தடையில்லை
அதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ''எந்த ஒரு அரசியல் கட்சியும் பொதுக் கூட்டம் நடத்த தடை விதிக்கப்படுவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் பொதுக் கூட்டங்கள் நடத்த மட்டுமே அனுமதிக்கப்படுவதில்லை,'' என்றார். இதையடுத்து, அ.தி.மு.க., தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, த.வெ.க., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பிரதான எதிர்க்கட்சியான தங்களையும் இணைத்துக் கொள்ள அனுமதி கோரினார். த.வெ.க., தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி வாதாடிய தாவது: பிரசாரக் கூட்டத்துக்கு கடந்த ஆகஸ்டில் அனுமதி கோரினோம். ஆனால், ஒரு நாளைக்கு முன்னர் தான் அனுமதி வழங்கப்பட்டது. முன்னரே அனுமதி வழங்கி இருந்தால், இந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்திருக்காது. ஒரு சில கட்சிகளுக்கு 11 நிபந்தனைகளும், எங்களுக்கு 23 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. சில கட்சிகளுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படுவதில்லை. எனவே, நிபந்தனைகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது என அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் தெரிவித்தால், அதை அறியும் மக்கள், தங்கள் பயணத்தை முன்னரே திட்டமிட்டு கொள்வர்.
வழங்குவதில்லை
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க அனுமதி கோரிய விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படவில்லை. எந்த ஒரு கூட்டத்திற்கும் அனுமதி வழங்குவதில்லை. இவ்வாறு அவர் வாதாடினார். இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: கூட்டங்களுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை உரிய காலத்திற்குள் பரிசீலித்து, அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே, கூட்டத்திற்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக, பொதுமக்கள் பாதுகாப்பு விஷயத்தில், எல்லா கட்சிகளுக்கும் முன்கூட்டியே அனுமதி வழங்க வேண்டும். கூட்டங்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி, நீதிமன்றத்தை அணுகினாலோ அல்லது நிலையான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்காவிட்டாலோ, இந்த நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்க நேரிடும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஆதாரமற்றது
கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ''அனுமதி கோரும் விண்ணப்பங்களை நிலுவையில் வைப்பது இல்லை. அவை உரிய காலத்துக்குள் பரிசீலிக்கப்படுகின்றன. த.வெ.க., தரப்பில் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. காவல் துறை, மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மருத்துவத் துறை ஆகியவற்றிடம் கலந்து ஆலோசித்து தான், நிலையான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க வேண்டும். அதற்கு உரிய அவகாசம் வழங்க வேண்டும்,'' என்றார். இதை ஏற்ற நீதிபதிகள், '10 நாட்களில் நிலையான வழிகாட்டு விதிமுறைகளை தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டு, விசாரணையை நவ., 11க்கு தள்ளி வைத்தனர். 'மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் தவிர, பிற அனுமதிக்கப்பட்ட இடங்களில், கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்க, இந்த வழக்கு தடையாக இருக்காது. கூட்டங்களுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது, குறித்த காலத்தில் முடிவெடுக்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டனர். ***