| ADDED : மார் 27, 2024 05:29 PM
சென்னை: 'தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கைகளின் விவரங்களை மனுதாரர் தரப்பிற்கு அறிக்கையாக வழங்க வேண்டும்' என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 ஆம் நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு, தடியடி சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 17 போலீசார் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (மார்ச் 27) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில்,‛‛ துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தயார் ஆகிவிட்டது. அறிக்கை தயாராகி விட்டதால், அடுத்த விசாரணைக்கு முன்னதாக மனுதாரரிடம் வழங்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளின் விவரங்களை மனுதாரர் தரப்பிற்கு அறிக்கையாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.