காலை உணவு திட்டம் என்னாச்சு? காத்திருந்து ஏமாந்த பள்ளி குழந்தைகள் காத்திருந்து ஏமாந்த பள்ளி குழந்தைகள்
சென்னை:அரசு உதவி பெறும் பள்ளிகளில், நேற்று காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டதால், பசியுடன் பள்ளிக்கு வந்த பிஞ்சு குழந்தைகள் ஏமாற்றம் அடைந்தனர். அரசு பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆர்வம் இந்த திட்டத்தை, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தை களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டது. அதை அரசு ஏற்று, கடந்தாண்டு முதல் கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாக, நகர, மாநகர எல்லையில் உள்ள பள்ளிகளிலும், இந்த திட்டத்தை செயல்படுத்தும்படி கோரிக்கைகள் வந்தன. அதனால், கடந்த மாதம், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்ட காமராஜர் பிறந்த நாளில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. அன்று தொடக்கப்பள்ளி குழந்தைகள் அதிகாலையிலேயே உணவருந்தாமல் பள்ளிக்கு வந்து, ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால், பள்ளிக்கல்வி மற்றும் சமூக நலத்துறை சார்பில், அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால், பசியுடனும், ஆர்வத்துடனும் வந்த குழந்தைகள் வாடி போயினர். இந்நிலையில், ஆகஸ்ட், 5ம் தேதியான நேற்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பள்ளியில், இந்த திட்டத்தை முதல்வர் துவக்கி வைப்பார் என்றும், அதேநேரத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும், நகராட்சி, மாநகராட்சி கமிஷனர்கள் தெரிவித்தனர். மேலும், 'அனைத்து பள்ளிகளிலும், ஒரே மாதிரியாக, முதல்வர் படத்துடன், காலை உணவு திட்டம் குறித்த அறிவிப்பு பேனர்கள் வைக்க வேண்டும். 'அனைத்து குழந்தைகளுக்கும் தேவையான எவர்சில்வர் தட்டு, டம்ளர், அமர்வதற்கான தடுக்குப்பாய் உள்ளிட்டவற்றை வாங்க வேண்டும்' என, கடந்தாண்டே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்த ஏற்பாடுகளை, நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக பள்ளிகளுக்கே சென்று ஆய்வு செய்து உறுதி செய்தனர். இதுகுறித்த தகவல்களை, சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு அனுப்பினர். இதையடுத்து நேற்று, தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில், முதல்வரின் காலை உணவு திட்ட துவக்க விழாவுக்காக, குழந்தைகளும் ஆசிரியர்களும் காத்திருந்தனர். ஆனால், சமூக நலத்துறை சார்பில், காலை உணவு அனுப்பப்படவில்லை. இதனால், பிஞ்சுக் குழந்தைகள் பசியால் வாடினர். இதையறிந்த பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியர் களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குழப்பம் இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: நகராட்சி நிர்வாகம், சமூக நலத்துறை, தொடக்க கல்வி துறைகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு இல்லாததால், காலை உணவு திட்ட விரிவாக்கத்தில் குழப்பம் நிலவுகிறது. உறுதியான தகவல்கள் வந்த பின், இதுகுறித்து முறையாக அறிவித்திருக்க வேண்டும். இப்படி செய்வதால், அரசுக்கு தான் அவப்பெயர் ஏற்படும். ஏனெனில், இது, குழந்தைகள் மற்றும் பெற்றோரிடம் உணர்வுப்பூர்வமான கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.