உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலவச வீட்டு மனைகளுக்கு வழிகாட்டி மதிப்பு எப்போது?

இலவச வீட்டு மனைகளுக்கு வழிகாட்டி மதிப்பு எப்போது?

சென்னை: தமிழக அரசு ஏழைகளுக்கு இலவசமாக ஒதுக்கும் வீட்டு மனைகளுக்கு, வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்க, அரசு உரிய வழிகாட்டுதல்களை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசுக்கு ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்கள், ஏழை மக்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. வருவாய் துறை மட்டுமல்லாது, ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாகவும், ஏழைகளுக்கு வீட்டுமனைகள் ஒ துக்கப்படுகின்றன. இதன்படி, நிலம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் பெயரில் ஒதுக்கீட்டு ஆணை மற்றும் இலவச பட்டா வழங்கப்படும். இவ்வாறு பட்டா பெற்றவர்கள், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு விற்கக்கூடாது என்ற, கட்டுப்பாடு உள்ளது. இந்த கட் டுப்பாடு இருக்கும் காலத்தில், ஒதுக்கீடு பெற்றவர்கள் தங்களின் குடும்ப வாரிசுகளுக்கு அந்த நிலத்தை கொடுக்கலாம். தானம், கொடை போன்ற வழிமுறைகளில், இதற்கான பத்திரத்தை பதிவு செய்து, அதன் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்ய வேண்டும். இதுபோன்ற காரணங்களுக்காக பத்திரம் தாக்கல் செய்யும் போது, அதன் மதிப்பை குறிப்பிட வேண்டும். சம்பந்தப்பட்ட நிலம், இந்த ஒதுக்கீட்டாளருக்கு வரும்முன் புறம்போக்கு நிலமாக இருந்ததால், அதற்கு தற்போதைய நிலவரப்படி வழிகாட்டி மதிப்பு இருக்காது. எனவே, இது தொடர்பான பத்திரங்கள் பதிவுக்கு ஏற்கப்படாது. இதனால், ஒதுக்கீட்டாளர்கள் தங்கள் நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்க கோரி, சார் - பதிவாளர் மற்றும் மாவட்ட பதிவாளர்களிடம் விண்ணப்பிக்கின்றனர். இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: ஏழைகளுக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், அரசு இலவசமாக வீட்டுமனைகளை வழங்குகிறது. இவ்வாறு ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கப்பட்ட நிலையில், அதற்கான வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க வேண்டும். மனைப்பிரிவு உருவாக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களால், பல்வேறு நிலைகளில் அதிகாரிகளை சரிக்கட்டி, சமாளித்து மதிப்பு நிர்ணய பணிகளை முடிக்க முடிகிறது. இலவசமாக மனை ஒதுக்கீடு பெற்ற ஏழை மக்களால் இதில் போட்டி போட முடியாது என்பதை, பதிவுத்துறை அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிலங்களுக்கு புதிதாக வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் அரசு வழிமுறைகளை தான், நாங்கள் கடைப்பிடிக்க முடியும். இலவச வீட்டு மனைகளுக்கு மதிப்பு நிர்ணயிப்பதை எளிதாக்க, அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அரசின் முடிவு அடிப்படையில் செயல்பட நாங்கள் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ