மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது: அமைச்சர் பதில்
சென்னை:''ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் முடிந்ததும், மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என, மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். 'மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்படும்' என, 2021 சட்டசபை தேர்தல் நேரத்தில், தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆட்சி முடிய சில மாதங்களே உள்ள நிலையில், இன்னும் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில், அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடந்து வருகிறது. 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் பணிகள் முடிந்ததும், மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது தான், அந்த திட்டத்தை செயல்படுத்துவது எளிதாக இருக்கும். 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்த 'டெண்டர்' கோரியுள்ளோம். 'டெண்டர்' இறுதி செய்யப்பட்டதும், 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் பணிகள் துவக்கப்படும். அரசின் இலவச மின்சார திட்டங்களை தவிர, மற்ற இடங்களில், 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.