புதிய வன ஆணையம் அமைப்பது எப்போது?
சென்னை:  தமிழகத்தில் வனத்துறை சார்ந்த நீண்டகால பிரச்னைகளை தீர்க்க, புதிய வன ஆணையம் எப்போது அமைக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக வனத்துறை பல்வேறு கோட்டங்கள், பிரிவுகளாக செயல்படுகிறது. துவக்கத்தில், வனச்சட்டம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் மட்டுமே அடிப்படையாக இருந்தது. தற்போது, காவல் துறையில் இருப்பது போன்று வனத்துறையிலும் புலனாய்வு, மோப்ப நாய்கள் பிரிவு, தீயணைப்பு பிரிவு போன்றவை செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாது, தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலும், வனத்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டியுள்ளது. ஆனால், வனத்துறை தலைமையகம் மற்றும் சில பிரிவுகளில் மட்டுமே, தொழில்நுட்ப பயன்பாட்டில் முன்னேற்றம் காணப்படுகிறது. மாவட்ட அளவிலும், கள நிலையிலும் புதிய தொழில்நுட்பங்கள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. குறிப்பாக, வனத்துறையில் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டு உள்ளதாக, உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், தேவைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை ஏற்படுத்தாமல் உள்ளனர். இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 
கடந்த, 2008ல் வன ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்பின், தற்போது வரை ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்னைகளை தீர்க்க, மீண்டும் வன ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக, 2021 தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், வன ஆணையம் அமைப்பதாக தெரிவித்தது. ஆட்சி அமைந்ததும், இதுகுறித்து துவக்கத்தில் பேசப்பட்டது. அதன்பின், வன ஆணையம் அமைக்கும் யோசனை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கான ஆணையம் அமைந்தால் தான் வனத்துறை சார்ந்த சட்ட விதிகள், அபராத கட்டணங்கள், பணியாளர் ஊதியம், பணி வரன்முறை போன்றவை முடிவு செய்ய வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.