உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டம் - ஒழுங்கு எங்கே இருக்கிறது: தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி

சட்டம் - ஒழுங்கு எங்கே இருக்கிறது: தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி

சென்னை:நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எங்கே இருக்கிறது என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.அன்புமணி அறிக்கை:நெல்லையில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜாகீர் உசேன் பிஜிலி என்பவர் இன்று காலை கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.முந்தைய திமுக ஆட்சியில் கருணாநிதிமுதலமைச்சராக பணியாற்றிய போது, அவரது பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியவர் ஜாகிர் உசேன். அதன்பின் விருப்ப ஓய்வு பெற்று நெல்லையில் வாழ்ந்து வந்தார். முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக பணியாற்றியவரையே வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.ஜாகிர் உசேனின் வீட்டிற்கு அருகில் உள்ள நிலத்தை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்து வந்ததாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிலருடன் ஏற்பட்ட பகை காரணமாகவே அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் தாம் எந்த நேரமும் படுகொலை செய்யப்படலாம் என்றும் காணொலி மூலம் அச்சம் தெரிவித்திருந்த ஜாகிர் உசேன் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவரது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் தான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களிலாவது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
மார் 18, 2025 20:36

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, சட்டம்-ஒழுங்கு இரண்டையும் ஒரு இரும்பு பெட்டியில் வைத்து பூட்டிவிட்டார்கள்.


Oru Indiyan
மார் 18, 2025 20:00

அய்யா சாமி. நீங்க முதலில் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு செய்த ஆய்வு சொல்லியது என்ன தெரியுமா.. உங்கள் 5 சட்டமன்ற உறுப்பினர்களில் 4 பேர் கிரிமினல்கள். 80 சதவீதம்.


சமீபத்திய செய்தி