தாட்கோ தரும் பொலிவு கிட் போவது எங்கே? கண்டுபிடிக்க மாணவர்கள் வலியுறுத்தல்
சென்னை:'தாட்கோ வழங்கும், 'பொலிவு கிட்' பல விடுதி மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அவை எங்கே செல்கின்றன என்பது குறித்து விசாரிக்க வேண்டும்' என, சமூக நீதி விடுதி மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதி மாணவர்களுக்கு, முடி திருத்தும் கூலி உள்ளிட்ட இதர செலவினமாக, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு முறையே, மாதம் 100 மற்றும், 150 ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி முதல் இந்த தொகைக்கு மாற்றாக, தாட்கோ சார்பில், விடுதி மாணவர்களுக்கு, குளியல் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட ஏழு பொருட்கள் அடங்கிய, 'பொலிவு கிட்' வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக, கல்லுாரி மாணவர்களுக்கு மட்டும், இந்த, 'கிட்' வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த விடுதி மாணவர்கள், இந்த, 'கிட்' வழங்கப்படுவதில்லை என்று புகார் தெரிவித்து உள்ளனர். ஆனால், 'தாட்கோ' சார்பில், அனைத்து மாவட்டங்களுக்கும், 'கிட்' அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்படியானால், அந்த 'கிட்' எங்கு செல்கிறது என, மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து, மதுரை மாடக்குளத்தை சேர்ந்த விடுதி மாணவர்கள் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்களுக்கும், அருகில் உள்ள தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்களுக்கும், இதர செலவின தொகை வழங்கவில்லை. அதேபோல, 'தாட்கோ' சார்பில் வழங்கப்படும், 'பொலிவு கிட்'டும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும், சில விடுதி மாணவர்களுக்கு, 'கிட்' வழங்கப்படவில்லை. அரசு தரப்பில் விடுதிகளுக்கு தேவையான, 'கிட்', மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளதாக கூறுகின்றனர். அவ்வாறு அனுப்பினால், அவை விடுதிக்கு வராமல், எங்கு செல்கின்றன என, அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். இது குறித்து, தாட்கோ அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த பிப்ரவரி முதல், மதுரையில் 626; சென்னையில் 2,193; கோவையில் 1,098 மாணவர்கள் என, தமிழகம் முழுதும், ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் உள்ள, சமூக நீதி விடுதியில் தங்கி படிக்கும் 15,257 மாணவர்களுக்கு, 'பொலிவு கிட்' அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படுவதை, ஆதிதிராவிடர் நலத்துறைதான் உறுதி செய்ய வேண்டும். இம்மாத இறுதியில், விடுதியில் உள்ள, 80,200 மாணவர்களுக்கு 'கிட்' வழங்க உள்ளோம்' என்றனர். பணமாக தாருங்கள்
தாட்கோ வழியே, ஒரே மாதிரியான சோப்பு, எண்ணெய், ஷாம்பு வழங்குவது எங்களுக்கு பிடிக்கவில்லை. முன்னர் அரசு தரப்பில், முடி திருத்தம் உள்ளிட்ட இதர செலவினங்களுக்கான தொகை, ரொக்கமாக வழங்கப்பட்டது. அதை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பணத்தை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும். 'பொலிவு கிட்' வழங்குவதை, தாட்கோ கை விட வேண்டும். - ஜெகதீஷ்வரன், மாடக்குளம் விடுதி மாணவர்