உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரப்பதிவை தவிர்க்கும் சார் - பதிவாளர்கள் யார்? பதிவுத்துறை விசாரணை

பத்திரப்பதிவை தவிர்க்கும் சார் - பதிவாளர்கள் யார்? பதிவுத்துறை விசாரணை

சென்னை : சர்வர் பிரச்னை என்று கூறி, பத்திரங்களை பதிவு செய்யாமல் தவிர்க்கும் சார் - பதிவாளர்கள் யார் என்பது குறித்து, பதிவுத்துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கிஉள்ளனர். கடந்த இரண்டு வாரமாக, கணினி பயன்பாட்டுக்கான, 'சர்வர்' பாதிப்பு என்று கூறி, பத்திரம் பதிய வருவோரை, சில சார் - பதிவாளர்கள் திருப்பி அனுப்புகின்றனர். இதில், சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்கள், தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, பதிவுத்துறை ஐ.ஜி., அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஒரே சமயத்தில், அதிக பத்திரங்கள் பதிவுக்கு வரும் நிலையில் தான், சர்வரின் வேகம் குறைந்து, பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக பத்திரப்பதிவின் போது, 'ஆன்லைன்' வாயிலாக சரிபார்ப்பு நிலையில் தாமதம் ஏற்படும். இதுபோன்ற தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டால், அதை உடனுக்குடன் சரி செய்ய, தனிப்பிரிவு செயல்படுகிறது. இருப்பினும், குறிப்பிட்ட சில சார் - பதிவாளர் அலுவலகங்களில், சர்வர் பிரச்னை என்று கூறி, பத்திரங்கள் பதிவு தவிர்க்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதன் பின்னணியில், சார் - பதிவாளர்கள் தவறு செய்கின்றனரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். யார் அந்த சார் - பதிவாளர்கள் என விசாரித்து வருகிறோம். தவறு செய்த சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

'ரெய்டு'க்கு பயந்து ஓட்டம்

பத்திரப்பதிவின் போது, லஞ்சம் கேட்பதாக புகார் வந்தால் மட்டுமின்றி, பொதுவான சந்தேகம் அடிப்படையிலும், சார் - பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துகின்றனர். குறிப்பாக, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், இந்த சோதனை அதிகரிக்கப்படும். இதை கருத்தில் வைத்து, பெரும்பாலான சார் - பதிவாளர்கள் விடுப்பில் செல்கின்றனர். அவர்களுக்கு பதிலாக பொறுப்பில் இருக்கும் உதவியாளர்கள் சிலர், பத்திரங்களை பதிவு செய்யாமல் திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ