ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் இன்னும் ஓட துவங்காதது ஏன்?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: முதல், 'ஸ்லீப்பர் வந்தே பாரத்' ரயிலை, பல்வேறு கட்ட சோதனை நடத்தி தயார் படுத்திய நிலையில், இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது, பயணியர் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில், இருக்கை வசதி மட்டுமே உள்ளது. 'சிசிடிவி கேமரா' அதனால், அடுத்தகட்டமாக, படுக்கை வசதி உள்ள, 'வந்தே பாரத்' ரயில்களை தயாரித்து, இரவு நேரங்களில் இயக்க ரயில்வே திட்டமிட்டது. அதன்படி, கர்நாடக மாநி லம் பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல்., நிறுவனத்தில், முதல், 'ஸ்லீப்பர் வந்தே பாரத்' ரயில் தயாரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த ரயில், சென்னை ஐ.சி.எப்., ஆலைக்கு வந்தது. இதில், 16 'ஏசி' பெட்டிகள் உள்ளன. பயணியரை கவரும் வகையில், ஆரஞ்ச், மஞ்சள் நிறங்களில் உள்அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. முதல் வகுப்பு பெட்டியில், வெந்நீரில் குளிக்கும் வசதி உள்ளது. ஒவ்வொரு இருக்கையிலும், புத்தகங்கள் வாசிப்பதற்கு வசதியாக, எல்.இ.டி., மின் விளக்கு, மொபைல் போன் மற்றும் லேப்டாப் சார்ஜிங் பாயின்ட் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. முதல் வகுப்பு, 'ஏசி' பெட்டியில், மேல் படுக்கைக்கு செல்ல ஏணி வசதி உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் தனித்தனியாக சிறிய உணவகம், உணவு பதப்படுத்தி வைக்க குளிர்பதன பெட்டி வசதியும், சூடாக உணவு பரிமாறுவதற்கு தனி வசதியும் உள்ளன. 'சிசிடிவி கேமரா' மற்றும் ரயில்கள் மோதலை தடுக்கும் தொழில்நுட்பம் என, 30 வசதிகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின், இந்த ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில், கடந்த ஆண்டு இறுதியில், சென்னை ஐ.சி.எப்., ஆலையில் இருந்து டில்லிக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா - லாபன் இடையே மணிக்கு, 180 கி.மீ., வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. அனைத்து சோதனைகளும் முடிந்து, ஆறு மாதங்களுக்கு முன், பாதுகாப்பு ஆணையரும் ஒப்புதல் அளித்து விட்டார். ஆனாலும், இன்னும் பயன்பாட்டிற்கு வராதது, பயணியருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இறுதிகட்டம் இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: 'ஸ்லீப்பர் வந்தே பாரத்' ரயில், மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் உடையது. நீண்ட துாரம் செல்லும் தடத்தில், ஸ்லீப்பர் ரயில் ஒன்று மட்டுமே போதாது. மற்றொரு ரயிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என கருதப்படுகிறது. 2வது ரயில் தயாரிப்பும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதன்பின், இந்த ரயில் போக்குவரத்து துவங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.