உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயிர் காப்பீட்டில் வேளாண் துறை முன்னிலை தோட்டக்கலை துறை பின்தங்கியது ஏன்?

பயிர் காப்பீட்டில் வேளாண் துறை முன்னிலை தோட்டக்கலை துறை பின்தங்கியது ஏன்?

சென்னை:பயிர் காப்பீட்டில், வேளாண் துறை முன்னிலை பெற்றுள்ள நிலையில், தனி அதிகாரி இல்லாததால், தோட்டக்கலைத் துறை பின்தங்கியுள்ளது. வறட்சி, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால், பயிர்கள் பாதிக்கப்படும்போது, விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காப்பதற்கு, பயிர் காப்பீடு உதவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இழப்பீடு இந்த திட்டத்தின் கீழ், பயிர் இழப்பீடு ஏற்படும் போது மட்டுமின்றி, சாகுபடி செய்ய முடியாத நேரங்களிலும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஒதுக்கும் நிதியை போல, பயிர் காப்பீடு மானியம் வழங்குவதற்கு, மாநில அரசும் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிதி, வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களுக்கு பிரித்து ஒதுக்கப்படுகிறது. ஆனால், வேளாண் பயிர்களுக்கு மட்டுமே அதிகளவில் காப்பீடு செய்யப்படுகிறது. தோட்டக்கலைத் துறை பயிர் காப்பீடு திட்டத்தில் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. தோட்டக்கலை பயிர் காப்பீடு திட்டத்திற்கு, அரசும் நிதி ஒதுக்கீட்டை குறைத்து வழங்கி வருகிறது. சமீபத்தில் டில்லியில், மத்திய வேளாண் துறையினர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி அதிகரிக்காததற்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொத்துமல்லி இதுகுறித்து, பயிர் காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்தாண்டு பயிர் காப்பீடு திட்டத்திற்கு, 768 கோடி ரூபாயை, தமிழக அரசு பங்களிப்பாக வழங்கியது. வாழை, கத்தரி, வெண்டை, கோஸ், கேரட், தேங்காய், கொத்துமல்லி, பூண்டு, இஞ்சி, வெங்காயம் உருளை, மிளகாய், தக்காளி, மரவள்ளி, மஞ்சள் ஆகிய, 15 தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய முடியும். ஆனால், 99,265 ஏக்கர் பயிர்களுக்கு மட்டுமே, 56.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டது. நடப்பாண்டு இத்திட்டத்திற்கு, 85.3 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் கண்காணிப்பு அதிகாரியாக, வேளாண் துறை இயக்குநர் உள்ளார். வேளாண் பயிர் காப்பீடுக்கு மட்டுமே, அவர் முக்கியத்துவம் அளிக்கிறார். இதனால், தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு குறித்த விழிப்புணர்வும், நிதி ஒதுக்கீடும் குறைந்து வருகிறது. இதுவும் தோட்டக்கலை பயிர் காப்பீடு குறைவதற்கு காரணம். எனவே, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைக்கு தனித்தனியாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை