உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு தாமதம் ஏன்? அமைச்சர்களுடன் அ.தி.மு.க., வாக்குவாதம்

காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு தாமதம் ஏன்? அமைச்சர்களுடன் அ.தி.மு.க., வாக்குவாதம்

சென்னை:யாருடைய ஆட்சியில் நதிநீர் திட்டங்கள் தொய்வடைந்தன என்பது குறித்து, அமைச்சர்களுடன் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சட்டசபையில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - சி.விஜயபாஸ்கர்: தமிழகத்தில் சாகுபடி பரப்பும், நெல், கரும்பு, பருத்தி, பயிர் வகைகள் உள்ளிட்ட விளை பொருட்களின் உற்பத்தி திறனும் குறைந்து வருகின்றன. நெல்லுக்கு குவின்டாலுக்கு 2,500 ரூபாய், கரும்புக்கு டன்னுக்கு 4,000 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், கடைசி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டும், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.சபாநாயகர் அப்பாவு: கடைசி பட்ஜெட் அல்ல. அடுத்த ஆண்டு ஒரு பட்ஜெட் உள்ளது.விஜயபாஸ்கர்: அடுத்த பட்ஜெட்டை பழனிசாமி தலைமையில் தாக்கல் செய்வோம்.அமைச்சர் பன்னீர்செல்வம்: தமிழகத்தில் சாகுபடி பரப்பும், உற்பத்தி திறனும் அதிகரித்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் மதிக்கப்படாத நிலையில் இருந்தனர். இப்போது, தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் மதிக்கப்படும் நிலைக்கு வந்திருக்கின்றனர்; மகிழ்ச்சியாக இருக்கின்றனர். வரும் ஆண்டில் கரும்புக்கு டன்னுக்கு 4,000 ரூபாய் கொள்முதல் விலை கிடைக்கும்.தி.மு.க., ஆட்சியில் கரும்பு விவசாயிகளுக்கு உடனுக்குடன் நிலுவைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: தமிழக அரசின் புள்ளிவிபரங்கள் அடிப்படையில் தான், சாகுபடி பரப்பு குறைந்துள்ளதாக விஜயபாஸ்கர் கூறினார். அ.தி.மு.க., ஆட்சியில் தான், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரே ஆண்டில் இருமுறை நிவாரணம் வழங்கப்பட்டது. எனவே, அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் மதிக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறுவது தவறு.விஜயபாஸ்கர்: புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்ட விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் காவிரி - வைகை -- குண்டாறு இணைப்பு திட்டத்தை, முன்னாள் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். ஆனால், தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கப்படாததால், 11 கி.மீ., மட்டுமே கால்வாய் வெட்டப்பட்டுள்ளது.அமைச்சர் துரைமுருகன்: காவிரி -- வைகை -- குண்டாறு இணைப்பு திட்டத்தை அறிவித்தவர் கருணாநிதி. அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்திற்கான கால்வாயை தொடர்ச்சியாக வெட்டாமல், இடையிடையே வெட்டியுள்ளனர். இது போன்ற தவறை யாரும் செய்திருக்க மாட்டார்கள்.பழனிசாமி: தேவையான நிதி ஒதுக்காததை மறைக்க, ஏதேதோ சொல்லி அமைச்சர் மழுப்புகிறார். நதிநீர் இணைப்புக்கான கால்வாய் வெட்ட நிலம் எடுப்பது, பெரும் பிரச்னையாக உள்ளது. எங்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அங்கு முதலில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கருமேனியாறு -- நம்பியாறு திட்டத்திற்கும் நிலம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், திட்டம் தாமதமாகி விடக்கூடாது என்பதற்காகவே, நிலம் எடுத்த இடங்களில் முதலில் பணிகளை மேற்கொண்டோம்.விஜயபாஸ்கர்: காவிரி -- வைகை -- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தாமாக முன்வந்து இடம் வழங்கி வருகின்றனர். எனவே, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.அமைச்சர் துரைமுருகன்: காவிரி -- வைகை -- குண்டாறு இணைப்பு திட்டத்தை அறிவித்தபோது, புதுக்கோட்டை மாவட்ட மக்கள் அதிக பலன் அடைவர் என, அன்றைய முதல்வர் கருணாநிதி கூறினார். அதை நாங்கள் மறக்கவில்லை.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
மார் 20, 2025 03:44

சாராய ஆறுகளை இணைப்பதில் முனைப்பு காட்டினால் பணம் வரும். ஆறுகளை இணைத்துவிட்டால் பொதுமக்கள் வாழ்ந்துவிடுவார்களே..


Appa V
மார் 20, 2025 03:14

மணல் கொள்ளை முடிந்தால் நிறைவேற்றலாம் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை