மத்திய அரசிடம் 50 சதவீத நிதி பகிர்வு கேட்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
சென்னை : 'மத்திய திட்டங்களுக்கு செலவாகும் கூடுதல் நிதி, மத்திய அரசின் குறைந்த நிதி பகிர்வு ஆகிய இரண்டும், மாநிலங்கள் மீதான நிதிச்சுமைக்கு முக்கிய காரணங்களாக உள்ளதால், 50 சதவீத நிதி பகிர்வு கேட்கிறோம்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
உலக அளவில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், 16வது நிதிக்குழு தன் பணியை மேற்கொண்டுள்ளது. சமமான மறுபங்கீடு
நட்புறவு நாடுகளுக்கு வணிக செயல்பாடுகளை மாற்றுதல், உற்பத்தி மற்றும் முதலீடுகளை மீண்டும் சொந்த நாட்டில் துவங்குதல் உள்ளிட்டவை, சர்வதேச வணிகம் மற்றும் முதலீட்டு நடைமுறைகளை மறுகட்டமைப்பு செய்கின்றன. இந்த மாற்றங்கள், இந்தியா மற்றும் தமிழகத்திற்கு தனித்துவமான வாய்ப்புகளை வழங்குகின்றன. இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால், மாநிலங்களுக்கு சமமான மறுபங்கீடு வழங்க வேண்டும். தமிழகம் போன்ற சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். இந்த சவால்கள், 16வது நிதிக்குழு முன் உள்ளது.முதல் நிதிக்குழு, 1951ல் அமைக்கப்பட்டதில் இருந்து, ஒவ்வொரு நிதிக்குழுவும் அந்தந்த காலத்தின் நிதி சிக்கல்களுக்கு ஏற்ப, தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொண்டன. ஒவ்வொரு நிதிக்குழுவும் குறைந்த வளர்ச்சி பெற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்க முயற்சி செய்துள்ளன. ஆனால், அவர்களின் நோக்கங்களுக்கும், அரசின் செயல்பாடுகளுக்கும் இடையே பெரும் இடைவெளி இருந்தது. எனவேதான், நிதி பகிர்வு முறையில், புதிய மற்றும் நியாயமான அணுகுமுறையை நாங்கள் முன்வைக்கிறோம். உதாரணமாக 15வது நிதிக்குழு, மாநிலங்களுக்கு, 41 சதவீதம் வரிபகிர்வு அளிக்க பரிந்துரைத்தது. ஆனால், முதல் நான்கு ஆண்டுகளுக்கு, மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து, 33.1 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. எதிர்பாராத விதமாக, வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியதே, பகிர்வில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு காரணம்.மாநில அரசுகள், மக்களுக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் வேளையில், மத்திய அரசும் அதற்கேற்றவாறு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய திட்டங்களுக்கு செலவாகும் கூடுதல் நிதி, மத்திய அரசின் குறைந்த நிதி பகிர்வு ஆகிய இரண்டும், மாநிலங்கள் மீதான நிதிச்சுமைக்கு முக்கிய காரணங்கள். எனவே தான், மத்திய வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு, 50 சதவீத நிதி பகிர்வு கோருகிறோம். இது, மாநிலங்கள் சுயாட்சியுடன் செயல்படவும், மாநில மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிமுகப்படுத்தவும் உதவும். கடந்த, 45 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் மறுபங்கீட்டுக் கொள்கை, வளர்ச்சிக்கு பெரிதாக உதவவில்லை. நம் கவனம், வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களுக்கு பெரிய பங்கை வழங்குவதிலா அல்லது அனைவருக்கும் சமமான பங்கீட்டு கொள்கையை பின்பற்றுவதில் இருக்கப் போகிறதா?. இதற்கான விடை சிக்கலானது. பாதையை தீர்மானிக்கும்
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் உந்து சக்தியாக இருக்கக்கூடிய, வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கு வரி பகிர்வை ஊக்குவிக்கவேண்டியது அவசியம். நிதிக்குழுவின் பரிந்துரை, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் வரிசையில், இந்தியாவை நிலைநிறுத்த தேவையான பாதையையும் தீர்மானிக் கிறது.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.