உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் விஜயால் அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பா? யாராலும் இருக்காது என்கிறார் பழனிசாமி

நடிகர் விஜயால் அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பா? யாராலும் இருக்காது என்கிறார் பழனிசாமி

கிருஷ்ணகிரி,:''வரும், 2026 சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை; இல்லவே இல்லை என்ற முடிவை ஏற்கனவே எடுத்து விட்டோம். அதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க., ஆட்சியில் மின்சார கொள்கை திட்டம் வகுக்கப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா, டாடா, டெல்டா உள்ளிட்ட பல்வேறு புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டன. நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மருத்துவக் கல்லுாரி உட்பட புதிய கல்லுாரிகள் துவங்கப்பட்டன. இது, இந்த மாவட்டத்தில் மட்டும் துவங்கப்பட்ட திட்டங்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்ற புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார்.மத்திய அரசு, வேளாண் நிலங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்ற திட்டமிட்டு, சர்வே பணி செய்ய நிதி ஒதுக்கியும், வேளாண் கல்லுாரி மாணவர்களை வைத்து, தமிழக அரசு இப்பணியை மேற்கொள்கிறது. இப்பணியில் ஈடுபட்ட மாணவர்களை, பாம்பு, விஷ ஜந்துகள் கடித்துள்ளன. மாணவர்களுக்கு ஏதேனும் பெரிய பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு தமிழக அரசுதான் காரணம். எந்த விஷயமானாலும், அதில் முன் ஜாக்கிரதை உணர்வு இன்றி, அரசு அதிகாரிகளும், அரசும் செயல்படுகிறது. 'வரும் 2026 சட்டசபைத் தேர்தலுக்கு எல்லா கட்சிகளையும் போல, அ.தி.மு.க.,வும் முழு வேகத்தில் தயாராகி வருகிறது. தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என கூறி இருந்தேன். அது உண்மைதான். ஆனால் நான் குறிப்பிட்டுச் சொன்னது, பா.ஜ., அல்லாத கட்சிகள் குறித்துத்தான். ஆனால், பா.ஜ.,வையும் சேர்த்து நான் குறிப்பிட்டது போன்ற செய்தியை பரப்பி விட்டனர். அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, 2026 சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். மீண்டும் சொல்கிறேன், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை இல்லவே இல்லை. இந்த விஷயத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நடிகர் விஜய் கட்சி புதிதாக கட்சித் துவங்கி இருக்கிறார். உடனே, அ.தி.மு.க.,வுக்கான இளைஞர்களின் ஓட்டுகளில் பாதிப்பு வருமா என, கற்பனையான கேள்விக்கு எப்படி பதில் சொல்ல முடியும். அ.தி.மு.க., பலமான தொண்டர்களை கொண்ட கட்சி. அதற்கு யாராலும் பாதிப்பு வராது. கடந்த, 2019 லோக்சபா தேர்தலை விட தற்போதைய லோக்சபா தேர்தலில், அதிக ஓட்டுக்களை அ.தி.மு.க., பெற்றுள்ளது. அதேபோல, தி.மு.க., அதன் ஓட்டு சதவீதத்தை இழந்துள்ளது. இது தான் உண்மை. ஆனால், இதை மறைத்து, தி.மு.க., ஏதோ மாபெரும் வெற்றி பெற்று விட்டது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர். சென்னை கிண்டி அரசு உயர் சிறப்பு மருத்துவமனை டாக்டரை, கத்தியால் குத்திய சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது. டாக்டர்கள் ஓய்வின்றி உழைப்பவர்கள். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கூடவே பணி செய்யும் இடத்தில் அவர்களுக்கான பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ