உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஷட்டர், ரெகுலேட்டர் சீரமைக்க ரூ.800 கோடி கிடைக்குமா? நீர்வளத்துறை காத்திருப்பு

ஷட்டர், ரெகுலேட்டர் சீரமைக்க ரூ.800 கோடி கிடைக்குமா? நீர்வளத்துறை காத்திருப்பு

சென்னை:மழைக்கு முன்பாக அணைகளின், 'ஷட்டர், ரெகுலேட்டர்' உள்ளிட்டவற்றை சீரமைக்க, 800 கோடி ரூபாயை எதிர்பார்த்து, நீர்வளத் துறை காத்திருக்கிறது.தமிழக நீர்வளத் துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. இவற்றில் பல்வேறு அணைகளின் நீர் திறப்பு ஷட்டர்கள், சங்கிலிகள், ரப்பர் சீல்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளன. நீர்வழித்தடங்களின் குறுக்கே ஆங்காங்கே முறைவைத்து நீரை திறப்பதற்கு, ரெகுலேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. முறையான பராமரிப்பின்மை காரணமாக, இவையும் சேதம் அடைந்துள்ளன.கடந்த ஆண்டு பெய்த மழையால், தென்பெண்ணையாற்றின் வடிநில கட்டமைப்புகளில் பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது. இதேபோல, 2023ம் ஆண்டு பெய்த மழையால், தாமிரபரணி ஆற்றின் கட்டமைப்புகளும் சேதம் அடைந்துஉள்ளன.கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் ரெகுலேட்டர்கள் சேதம் அடைந்துள்ளன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் திருவள்ளூர் மாவட்ட ஏரிகளிலும், ஷட்டர்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. மாநிலம் முழுதும் முறையான பராமரிப்பில்லாத ஷட்டர்கள், ரெகுலேட்டர்கள் உள்ளிட்டவற்றை, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக சீரமைக்க வேண்டியுள்ளது. இதற்காக, நீர்வளத் துறை வாயிலாக நிதித் துறையிடம், 800 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், நிதித் துறையிடம் இருந்து ஒப்புதல் வரவில்லை. இதனால், நிதித் துறையின் ஒப்புதலை எதிர்பார்த்து நீர்வளத் துறையினர் தவம் கிடக்கின்றனர்.

இதுகுறித்து, நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 35 மாவட்டங்களில் உள்ள பழுதடைந்த 149 பாசன கட்டமைப்புகளில், புனரமைப்பு, மறுசீரமைப்பு, மறுகட்டுமானம் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு, 772 கோடி ரூபாய் நிதித் துறையிடம் கேட்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர், விளாங்காட்டூர் கண்மாய், சலிப்பேரி, வேலமருதன் ஏரிகளுக்கு நீர் செல்லும் உய்யகொண்டான் கால்வாயின் குறுக்கே, புதிதாக ரெகுலேட்டர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் மறவாபாளையம், திருச்சி உய்யகொண்டான் கால்வாயில் குறுக்கே புதிய ரெகுலேட்டர் அமைக்க வேண்டியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல்நீர் ஊடுருவலை தடுக்கும் வகையில், மருதம்பள்ளம் சேவகனாறு வடிகாலின் குறுக்கே ரெகுலேட்டர் அமைக்கப்பட வேண்டும். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள, 100 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படுகிறது. தோராயமாக 872 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், முதற்கட்டமாக, 800 கோடி ரூபாயை வழங்கும்படி கேட்கப்பட்டு உள்ளது. ஆனால், நிதித் துறையிடம் இருந்து பதில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

lana
ஜூலை 16, 2025 10:43

இந்த பணத்தில் பேனா சிலை வைக்கலாம் ஈர வெங்காயம் சிலை வைக்கலாம். அதனால் சமூக நீதி கிடைக்கும். இதை சரி செய்தால் தண்ணீர் தானே கிடைக்கும். ஓட்டு கிடைக்குமா


D Natarajan
ஜூலை 16, 2025 07:50

விடியல் மிகவும் பிஸி. இதற்க்கு பணம் இருக்காது. ஆனால் 1000 rs கொடுக்க பணம் இருக்கும். தேர்தல் நேரம் . யார் தமிழ் நாட்டை காப்பாற்றுவது


சாமானியன்
ஜூலை 16, 2025 06:44

மத்திய அரசு ஏற்கனவே தந்த நிதி எல்லாம் எங்கேதான் போகின்றது ? மாநில நிதி அமைச்சரே! எல்லாம் மர்மமாகவே இருக்கிறது.


சமீபத்திய செய்தி