உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாய்மை மிஷன் திட்டம் துவக்கம் சுத்தமாகுமா அரசு அலுவலகங்கள்?

துாய்மை மிஷன் திட்டம் துவக்கம் சுத்தமாகுமா அரசு அலுவலகங்கள்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு அலுவலகங்களில், 'துாய்மை மிஷன்' திட்டம் நேற்று துவங்கிய நிலையில், தலைமை செயலகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பயன்படுத்திய பழைய பொருட்கள், தளவாடங்கள் அகற்றப்பட்டன.அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்பு பகுதிகள், சாலைகள் என பொது இடங்களில் ஆங்காங்கே குப்பை குவிந்து கிடக்கின்றன. இதனால், மழை காலங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதுடன், நீர்வழித்தடங்களில் அடைப்பும் ஏற்படுகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என, பல தரப்பட்டவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது.

திடக்கழிவு

எனவே, நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் நாள்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்ய, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை வாயிலாக துாய்மை மிஷன் திட்டம் துவங்கப்படும் என்று, துணை முதல்வர் உதயநிதி அறிவித்திருந்தார். அதன்படி, உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று, துாய்மை மிஷன் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுதும், 1,077 அரசு அலுவலகங்களில் தேங்கிய திடக்கழிவுகளை அகற்றும் பணி நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் அறை, துறை செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அறைகள், பிரிவு அலுவலகங்கள் போன்றவற்றில் பல ஆண்டுகளாக தேங்கி கிடந்த பழைய பொருட்கள், காகிதங்கள், உடைந்த நாற்காலி, மேஜைகள் அப்புறப்படுத்தப்பட்டன. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போடப்பட்ட அரசு உத்தரவு நகல்கள், துறை சார்ந்த தேவையில்லாத காகித பைல்கள், பழுதடைந்த கம்ப்யூட்டர், பிரின்டர், மின் விளக்குகள் உள்ளிட்ட பயன்பாடற்ற சாதனங்களும் அப்புறப்படுத்தப்பட்டன.

மறுசுழற்சி

இதேபோல, சென்னையில் எழிலகம், நந்தனம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அரசு அலுவலகங்களிலும், பல ஆண்டு கால திடக்கழிவுகள் அகற்றப்பட்டன. மாநிலம் முழுதும் கலெக்டர் அலுவலகங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் கழிவுகள், மின்னணு கழிவுகள், உலோக கழிவுகள், காகித கழிவுகள், கண்ணாடி கழிவுகள், பயன்படுத்த இயலாத மர தளவாடங்கள் போன்ற பலவிதமான கழிவுகள் அப்புறப்படுத்தப் பட்டன. இந்த கழிவுகள், நிலப்பரப்பில் குவிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில், உயர் தொழில்நுட்பத்தின் வாயிலாக மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்பட உள்ளன. இப்பணியை மேற்கொள்ள, அரசு செயலர்கள், கலெக்டர்கள் உட்பட அதிகாரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு உள்ளதாக, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலர் பிரதீப் யாதவ் கூறியுள்ளார்.

துாய்மை பணி

துாய்மை மிஷன் திட்டத்தை செயல்படுத்த, 'துாய்மை தமிழ்நாடு நிறுவனம்' துவக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்திற்கு, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை வாயிலாக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை செயல் படுத்த, மாநில அளவிலான குழுவுக்கு தலைவராக முதல்வரும், துணை தலைவராக துணை முதல்வரும் உள்ளனர். அமைச்சர்கள் உட்பட, 20 பேர் அடங்கிய நிர்வாக குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல, தலைமை செயலர் தலைமையில் 11 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவும், மாவட்ட அளவில் கலெக்டர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட துாய்மை குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

chinnamanibalan
ஜூன் 06, 2025 11:24

அரசு அலுவலகங்கள் பலவற்றிலும் ஒட்டடை கூட அடிக்காமல் ஆங்காங்கே நூல் போன்று ஒட்டடை தொங்கும் காட்சியை காண முடியும். அது போல அரசு அலுவலகங்களில் உள்ள கழிப்பறை நிலவரமோ அன்றாடம் சுத்தம் செய்யாததால், மூக்கை இறுக மூடிக்கொண்டு செல்ல வேண்டிய அவலத்திலும் அவலம். மொத்தத்தில் தூய்மை என்பது அரசு அலுவலகங்களில் வேதனை! வெட்கக்கேடு!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை