மீண்டும் புயல் வருமா? வானிலை மையம் மறுப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'வங்கக்கடலில், அடுத்த ஒரு வாரத்தில் புதிய புயல் உருவாகி, பலத்த மழையை கொடுக்கும்' என, பரவும் தகவலை, வானிலை ஆய்வு மையம் மறுத்துள்ளது. வங்கக்கடலில் உருவான, 'பெஞ்சல்' புயல் புதுச்சேரி அருகே நவம்பர் 30 இரவில் கரையை கடந்தது. இதனால், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியதாக, சில தகவல்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன. அதன்படி, அடுத்த ஒரு வாரத்துக்குள் வங்கக்கடலில் புதிய புயல் உருவாகும் என்றும், அதன் காரணமாக தற்போது வந்ததை விட மிக கடுமையான மழைப்பொழிவு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில், உடனடியாக புதிய புயல் உருவாக வாய்ப்பு இல்லை என, வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு அறிக்கையையும், அந்த மையம் வெளியிட்டுள்ளது. அதில், டிச., 8 வரை புதிய புயல் உருவாவது தொடர்பான எந்த தகவலும் இடம் பெறவில்லை. மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு என்று கூறப்பட்டு உள்ளது.