உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காற்றாலைகளில் 6 மாதங்களிலேயே 1,261 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி

காற்றாலைகளில் 6 மாதங்களிலேயே 1,261 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி

சென்னை:தமிழகத்தில், காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களில், கடந்த 2023 - 24ம் ஆண்டில், 1,282 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியான நிலையில், நடப்பு நிதியாண்டில், ஆறு மாதங்களிலேயே, 1,261 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகி உள்ளது. தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், 9,400 மெகா வாட் திறனில், காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து உள்ளன. சராசரி இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, நிறுவனங்கள் ஆலைகளின் சொந்த தேவைக்கு பயன்படுத்துவதுடன், மின் வாரியத்திற்கும் விற்கின்றன. வழக்கமாக, மே இறுதி முதல் செப்., வரை காற்றாலை சீசன். இந்த காலத்தில் தினமும் சராசரியாக, 7 - 8 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது. மற்ற மாதங்களில் குறைவாக கிடைக்கிறது. நடப்பு சீசனில், காற்றின் வேகம் அதிகம் உள்ளதால், சீசனில் அதிக மின்சாரம் கிடைத்தது. இதனால், இந்த நிதியாண்டில் ஏப்., முதல் நேற்று முன்தினம் வரை, 1,261 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியானது. கடந்த, 2023 - 24 முழு ஆண்டில் அதிக அளவாக, 1,282 கோடி யூனிட் கிடைத்த நிலையில், இந்த ஆண்டின் ஆறு மாதங்களில், அந்த அளவை எட்டியுள்ளது. பருவநிலை இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால், இந்த நிதியாண்டில் அதிக மின்சாரம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது: பருவ நிலை மாற்றம் காரணமாக, இந்த சீசனில் தினமும் காற்றின் வேகம் அதிகம் இருந்ததாலும், முன்கூட்டியே காற்று சீசன் துவங்கி விட்டதாலும், அக்., 3ம் தேதி வரை சீசன் ஒரே சீராக இருந்ததாலும், இந்த ஆண்டில் காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த சீசனில், 36 நாட்களில், தினமும், 10 கோடி யூனிட் மேல் மின்சாரம் கிடைத்துள்ளது. கடந்த ஆக., 16ல் அதிக அளவாக, 12.38 கோடி யூனிட் உற்பத்தியானது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ