நாளை உருவாகிறது காற்றழுத்தம் இன்று முதல் 24 வரை மழை பெய்யும்
சென்னை:'தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அடுத்த இரு தினங்களில், அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இன்று முதல் 24ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.அதன் அறிக்கை:குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், நேற்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகலாம். இது மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். பனிமூட்டம்
அதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல், 24ம் தேதி வரை, லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வரும், 25 முதல் 27ம் தேதி வரை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நேற்றைய காலை, 8:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேர நிலவரப்படி, அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 44; தங்கச்சிமடத்தில் 34; பாம்பனில் 28; மண்டபத்தில் 27; மயிலாடுதுறை மாவட்டம் கோடியக்கரையில் 17. ராமநாதபுரத்தில் 13; நாகப்பட்டினம் வேதாரண்யத்தில் 12; வேளாங்கண்ணியில் 11; திருப்பூண்டியில் 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அதேபோல, தென்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், அதிகாலை லேசான பனி மூட்டம் காணப்படும். எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், இன்றும், நாளையும், சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.