விரைவில் 36,000 ஏரிகளில் துார்வாரும் பணி தொடங்கும்
சென்னை: ''தமிழகம் முழுதும் 36 ,000 ஏரிகளில், தனியார் பங்களிப்புடன் விரைவில் துார்வாரும் பணிகள் தொடங்கப்படும்,'' என, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் கூறினார். சட்டசபையில் நடந்த விவாதம்:
பா.ம.க.,- சவுமியா அன்புமணி: நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு, மூலதன செலவுகளில் கூடுதல் நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். தமிழகத்திற்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையில் கிடைக்கும் நீர், வீணாக கடலில் கலக்கிறது. அதை சேமிப்பதற்கு, காவிரி ஆற்றில், 10 கி.மீ.,க்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். இதன் வாயிலாக, 20 டி.எம்.சி., நீரை சேமிக்கலாம். தமிழகத்தில், 35 பெரிய ஆறுகள் உள்ளன . இவற்றில் தடுப்பணைகள் கட்டினால், மழையால் கிடைக்கும் 100 டி.எம்.சி., நீரை சேமிக்கலாம். கர்நாடகா, கேரளா, ஆந்திரா என, மாநிலங்களிடம் கையேந்த வேண்டியதில்லை. தமிழகத்தில், 42 ஆயிரம் ஏரிகள் இருந்தன. இப்போது, 27 ஆயிரம் ஏரிகளே உள்ளன. அவற்றை துார்வாரினால், 150 டி.எம்.சி., நீரை சேமிக்கலாம். இவற்றுக்கு நிதி ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. அமைச்சர் ஆனந்த்: நீர்வளத்துறைக்கு, கடந்த ஆட்சியை விட கூடுதல் நிதியை, முதல்வர் விஜய் ஒதுக்கி உள்ளார். மாநிலத்தில் உள்ள ஏரி, குளங்களை, தனியார் பங்களிப்புடன் துார் வார, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில், அடையாறு, கூவம் மற்றும் வேளச்சேரி ஏரி, நாராயணபுரம் ஏரியை, தனியார் பங்களிப்புடன் துார்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. ஊரக வளர்ச்சி துறையில், 22 ஆயிரம், நீர்வளத்துறையில் 14 ஆயிரம் ஏரிகள் உள்ளன. இவற்றை தனியார் பங்களிப்புடன், துார்வாரும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இவ்வாறு விவாதம் நடந்தது.
'அத்தை, பாட்டி சீர் கொடுப்பது யார்?'
பட்ஜெட் விவாதத்தில், பா.ம.க., - எம்.எல்.ஏ., சவுமியா அன்புமணி பேசுகையில், ''கூட்டுறவு பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. குடும்ப தலைவியாகிய நாங்கள் பட்ஜெட் போடுவோம். ''வீட்டு வாடகை, மின் கட்டணம், மருத்துவ செலவு, பள்ளி கட்டணம், மளிகை பொருட்கள், இ.எம்.ஐ., என, பட்ஜெட் போடுவோம். வெறும் கையில் முழம் போடுவது சிரமம் தான். தாய்மாமன் சீர், முதல்வர் விஜய் கொடுப்பார். அத்தை சீர், பாட்டி சீரை நாம் தான் கொடுக்க வேண்டும்,'' என்றார்.