உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோயம்பேடிலிருந்து அரசு ஏசி பஸ்சை ஆந்திராவுக்கு கடத்திய வாலிபர் கைது

கோயம்பேடிலிருந்து அரசு ஏசி பஸ்சை ஆந்திராவுக்கு கடத்திய வாலிபர் கைது

சென்னை:சென்னை கோயம்பேடு பணிமனையில், 'பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த அரசு, 'ஏசி' பஸ்சை கடத்தி, ஆந்திர மாநிலம் நெல்லுார் வரை ஓட்டிச்சென்ற ஒடிசா மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இயக்கப்படும் தடம் எண், '200' என்ற 'ஏசி' பேருந்து, கோயம்பேடு பணிமனை, 'பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இப்பேருந்தை இயக்குவதற்கு, நடத்துநர் மற்றும் ஓட்டுநர், நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு பணிமனைக்கு வந்தனர். நிறுத்தியிருந்த இடத்தில் பேருந்து இல்லாததால் அதிர்ச்சியடைந்த அவர்கள், பணிமனை முழுதும் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால், பணிமனை மேலாளர் ராம்சிங், கோயம்பேடு பேருந்து நிலையத்தின் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார், பணிமனையில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் பேருந்தை கடத்திச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. உடன், பேருந்தில் பொருத்தியுள்ள ஜி.பி.எஸ்., கருவி வாயிலாக அப்பேருந்து, ஆந்திர மாநிலம் நெல்லுார் வழியாக செல்வதை உறுதி செய்தனர். இதுபற்றி ஆந்திர மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், நெல்லுார், அத்மகூர் என்ற இடத்தில், பேருந்தை வழிமறித்தனர். கடத்தல் ஆசாமியையும் பிடித்து, சென்னை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தனிப்படை போலீசார் விரைந்து சென்று, மீட்கப்பட்ட கடத்தல் பேருந்தை, ஓட்டுநர் உதவியுடன் சென்னைக்கு ஓட்டி வந்தனர். கடத்தல் ஆசாமியையும் உடன் அழைத்து வந்தனர். அவர், வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி. அதனால், சைகை மொழி ஆசிரியர்கள் உதவியுடன், அந்த ஆசாமியிடம் விசாரித்தனர். அப்போது அந்த ஆசாமி, ஒடிசா மாநிலம், கட்டாக் பகுதியைச் சேர்ந்த ஞானசஞ்சன்சாஹு, 24, என்பது தெரியவந்தது. ஊர் சுற்றி பார்ப்பதற்காக, பேருந்தை திருடியதாகவும், இதற்கு முன், மாதவரம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தையும் இதேபோல் கடத்தி போலீசாரிடம் சிக்கியவர் என்பதும் தெரியவந்தது. 'ஏசி' பேருந்து பெட்டியில் இருந்த சாவியை எடுத்து பேருந்தை கடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
செப் 13, 2025 04:22

இந்தக் கதை நம்பும்படியாக இல்லையே. யாரோ செய்து விட்டு பழியை வாய் பேச முடியாத, காது கேளாத ஒருவரை கோர்த்து விட்டது மாதிரி தெரிகிறது. அந்த பெத்தாச்சிதான் துணை புரியணும்.


சமீபத்திய செய்தி