உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் அனுமதி

தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் அனுமதி

வாஷிங்டன்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணாவை, இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.மஹாராஷ்டிராவின் மும்பையில் 2008 நவ., 26ல், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, நம் அண்டை நாடான பாக்., வம்சாவளியைச் சேர்ந்த வட அமெரிக்க நாடான கனடாவின் தொழிலதிபர் தஹாவூர் ராணா, மூளையாகச் செயல்பட்டது தெரிய வந்தது. இவர், இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை நாடு கடத்தும்படி, அமெரிக்காவிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.இதற்கிடையே, தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த தடை விதிக்கக் கோரி, கலிபோர்னியாவின் மத்திய மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், தஹாவூர் ராணா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து, அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், தஹாவூர் ராணா மேல் முறையீடு செய்தார். இதை சமீபத்தில் விசாரித்த நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.மேலும், அமெரிக்கா - இந்தியா இடையேயான ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கு தஹாவூர் ராணா நாடு கடத்தப்படலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, அவர் மீண்டும் மேல்முறையீடு செய்வார் என, தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ