நியூயார்க், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், 2022ம் ஆண்டில், உலகிலேயே மிகவும் அதிகமாக சொந்த நாட்டுக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. மொத்தம், 9.27 லட்சம் கோடி ரூபாய் அனுப்பி இந்த சாதனையை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படைத்துள்ளனர்.சர்வதேச புலம்பெயர்ந்தோர் சங்கம், 2000ம் ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதன்படி, 2022ம் ஆண்டுக்கான உலக புலம்பெயர்ந்தோர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சாதனை
இந்த அறிக்கையின்படி, வெளிநாடுகளில் உள்ளவர்கள், தங்களுடைய சொந்த நாட்டுக்கு பணம் அனுப்புவதில், 100 பில்லியன் டாலர், அதாவது 10,000 கோடி டாலருக்கு அதிகமாக அனுப்பிய சாதனையை இந்தியா படைத்துள்ளது.இந்தியர்கள், 2022ம் ஆண்டில், 11,000 கோடி டாலர், அதாவது, 9.27 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்தப் பட்டியலில் மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ் ஆகியவை அடுத்த நிலைகளில் உள்ளன.அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:உலகின் பல்வேறு நாடுகளில், 1.8 கோடி இந்தியர்கள் உள்ளனர். இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில், 1.3 சதவீதமாகும். அதுபோல, புலம்பெயர்ந்தவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, சவுதி அரேபியாவில் உள்ளனர்.பல்வேறு கடினமான சூழ்நிலைகள், கடன் நெருக்கடிகள், பயணச் செலவு அதிகரிப்பு, குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் ஏக்கம், கடுமையான பணிகள், பதற்றமான சூழ்நிலை, முறையான உணவு, துாக்கமின்மை போன்றவை இருப்பினும், வெளிநாடுகளில் பணியாற்றுவோர், தங்களுடைய குடும்பத்துக்கு பணத்தை அனுப்பி வைக்கின்றனர்.அந்த வகையில், முதல் முறையாக, 10,000 கோடி டாலருக்கு அதிகமான தொகையை அனுப்பி, அதிக பணம் அனுப்பிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. முதலிடம்
கடந்த, 2010, 2015 மற்றும் 2020ம் ஆண்டுகளிலும் இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருந்தது.புலம்பெயர்ந்தோர் அதிகளவுள்ள நாடுகளில், யு.ஏ.இ., முதலிடத்தில் உள்ளது. இங்கு, 88 சதவீதம் பேர் புலம்பெயர்ந்தோர். அதற்கடுத்து, கத்தாரில் 77 சதவீதம், குவைத்தில் 73 சதவீதம் பேர் புலம்பெயர்ந்தோர்.வெளிநாட்டவர்கள் அதிகம் பணிபுரியும் நாடுகளில் இந்தியா, 13வது இடத்தில் உள்ளது. அங்கு, 44.8 லட்சம் வெளிநாட்டவர் பணிபுரிகின்றனர்.வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களில், 10 லட்சத்துக்கும் அதிகமானோருடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 5.08 லட்சத்துடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிகளவு வெளிநாட்டு மாணவர்கள் படிக்கும் நாடாக, 8.33 லட்சத்துடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரிட்டனில் 6 லட்சம், ஆஸ்திரேலியாவில் 3.78 லட்சம் வெளிநாட்டவர் படிக்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.