உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவின் போர் நிறுத்த முயற்சி தற்காலிக நிம்மதி என ரஷ்யா கிண்டல்

அமெரிக்காவின் போர் நிறுத்த முயற்சி தற்காலிக நிம்மதி என ரஷ்யா கிண்டல்

மாஸ்கோ 'அமெரிக்கா முன்வைத்துள்ள போர் நிறுத்த யோசனையானது, உக்ரைன் ராணுவம், தற்காலிகமாக நிம்மதி பெருமூச்சு விட மட்டுமே உதவும்' என, ரஷ்யா தெரிவித்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளை கடந்து போர் நீடிக்கிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் பதவியேற்றதும், இந்த போரை நிறுத்துவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

தற்காலிக போர்

போர் நிறுத்தம் தொடர்பாக, மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் அமெரிக்கா, உக்ரைன் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.அப்போது, 30 நாள் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ள உக்ரைன் ஒப்புக்கொண்டது; அதிபர் ஜெலன்ஸ்கியும் அதை உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு ராணுவ உதவியை நிறுத்தி வைத்த உத்தரவை அமெரிக்கா வாபஸ் பெற்றது. 'இனி, ரஷ்யாவின் தருணம்' என, டிரம்ப் கூறினார். இந்நிலையில், சவுதி அரேபியாவில் உருவான, நிபந்தனையற்ற 30 நாள் தற்காலிக போர் நிறுத்த திட்டத்துடன், ரஷ்யாவுக்கு அமெரிக்க துாதர்கள் நேற்று சென்றனர். ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ரஷ்யா ஆர்வம் காட்டவில்லை. இது தொடர்பாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் உடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் முக்கிய ஆலோசகரான யூரி உஷகோவ், தொலைபேசியில்பேசினார்.இதையடுத்து யூரி நேற்று கூறியதாவது:இந்த போர் நிறுத்த முன்மொழிவு, உக்ரைன் ராணுவம் தற்காலிகமாக நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு மட்டுமே உதவும். அதைத் தவிர வேறு எதுவும் இல்லை.ரஷ்யாவின் சட்டப்பூர்வ நலன்களை பாதுகாக்கும் விதமான, நீண்டகால அமைதித் தீர்வு தான் ரஷ்யாவின் குறிக்கோள். அதற்காகத்தான் நாங்கள் பாடுபடுகிறோம்.

சந்தேகம்

தற்போதைய சூழலில் அமைதியை பின்பற்றுவதற்கான எந்த நடவடிக்கையும், யாருக்கும் தேவையில்லை என கருதுகிறேன். எனினும், இந்த போர் நிறுத்த முன்மொழிவு தொடர்பாக, சில முக்கியமான முடிவுகளை அதிபர் புடின் எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்காவின் முயற்சியில், முதலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முட்டுக்கட்டை போட்டார். அவர் இறங்கி வந்த சூழலில், ரஷ்யா முட்டுக்கட்டை போடுவதால், அமெரிக்காவின் முயற்சி வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உக்ரைன் நகரை கைப்பற்றிய ரஷ்யா

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா பேச்சு நடத்தி வரும் நிலையில், உக்ரைன் வசம் இருந்த குர்ஸ்க் பிராந்தியத்தின் சுட்ஸா என்ற நகரை ரஷ்யா கைப்பற்றியது. அங்கிருந்து உக்ரைன் படைகளை துரத்தியதாக, ரஷ்ய ராணுவ அமைச்சகம் நேற்று தெரிவித்தது. ரஷ்ய அதிபர் புடின், குர்ஸ்க் பகுதிக்கு நேற்று திடீர் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள ராணுவ தளபதிகளை சந்தித்தார். அடுத்த சில மணி நேரத்தில், சுட்ஸா நகரை மீட்டதாக அறிவிப்பு வெளியானது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

USER_2510
மார் 14, 2025 18:40

பனிப்போர் முடியவில்லை எப்போ வேணும்னாலும் ரஷ்யா, அமெரிக்காவோட நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ போரை தொடரவே விரும்பும். அமெரிக்கா தன்னுடைய பவரை எகனாமிக் சாங்க்ஷன்ஸ் வழியே தான் காட்டும். மிலிட்டரி வழியாக காட்டினால் அது மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்கும். ஏன் என்றால் அணுஆயுதத்தை பொறுத்தவரை அமெரிக்காவை விட ரஷ்யா கொஞ்சம் பவர் ஜாஸ்தி அதனாலேயே இரண்டு நாடுகளுக்கும் போர் வர வாய்ப்பு இல்லை