பற்றி எரியும் ஹாலிவுட் ஹில்ஸ் 1.30 லட்சம் பேர் வெளியேற்றம்; 1,000 வீடுகள் நாசம்
லாஸ் ஏஞ்சலஸ் :அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ, தொடர்ந்து கொழுந்து விட்டு எரிகிறது. புகழ்பெற்ற ஹாலிவுட் ஹில்ஸ் மலைப் பகுதியை காட்டுத் தீ தொடர்ந்து கபளீகரம் செய்து வருகிறது. இந்த விபத்தில், 1,000 வீடுகள் இரையாயின. இதனால், ஹாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட, 1.30 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் காட்டுத் தீ ஏற்பட்டு, கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. சூறாவளி அளவுக்கு பலத்த காற்று வீசுவதால், காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருகிறது. ஒரு பக்கம் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடும் நிலையில், மற்றொரு பக்கம் புதிதாக தீப்பிடிக்கிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளை, தீ சூழ்ந்துள்ளதால், கரும்புகை மண்டலம் உருவாகியுள்ளது.இதுவரை, 26,000 ஏக்கர் பரப்புள்ள வனப் பகுதி, தீயில் கருகியதாக கூறப்படுகிறது. இதைத் தவிர, 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் சாம்பலாயின. பல சொகுசு கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் முழுமையாக சேதமடைந்துள்ளன.தீயணைப்பு வீரர்கள், 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். போதிய தீயணைப்பு வீரர்கள் இல்லாததால், மற்ற நகரங்கள் மற்றும் அண்டை மாகாணங்களில் இருந்தும் வீரர்களை வரவழைத்துள்ளனர். இதைத் தவிர, ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர்களின் உதவியையும் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நாடியுள்ளது. இதற்கிடையே, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.ஹாலிவுட் பிரபலங்கள் வசிக்கும் ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியிலும் தீ பரவியுள்ளது. இதனால், பல பிரபல நடிகர்கள், பாடகர்கள் உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அவர்களுடைய பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் தீயில் கருகியுள்ளன. ஐந்து பேர் இறந்துள்ளனர். பல ஹாலிவுட் படங்கள் எடுக்கப்பட்டுள்ள ஸ்டூடியோக்கள் உள்ளிட்டவையும் தீயில் நாசமடைந்தன. ஒட்டு மொத்தமாக, 4.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும், ஆஸ்கர் விருதுக்கு உரியோரை தேர்வு செய்வதற்கான கூட்டம், லாஸ் ஏஞ்சலிசில் இந்த வாரம் நடக்க இருந்தது; இது, 19ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.காட்டுத் தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர். இடம்: ஈட்டன்.
வீடு இழந்த நடிகர்கள்
லாஸ் ஏஞ்சலஸ் நகரைத் தவிர, கலிபோர்னியாவின் பெரும் பணக்காரர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் நவசிக்கும் காலாபாசாஸ், சான்டா மோனிகா உள்ளிட்ட பகுதிகளுக்கும் காட்டுத் தீ பரவியுள்ளது.ஹாலிவுட் பிரபலங்கள் மேண்சி மோரே, கேரி எல்வீஸ், பாரிஸ் ஹில்டன் உள்ளிட்டோர் தங்களுடைய வீடுகள் தீயில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த, 45 ஆண்டுகளாக வசித்து வந்த தங்களுடைய வீடு தீயில் கருகியுள்ளதாக பில்லி கிறிஸ்டல், அவருடைய மனைவி ஜேனிஸ் தெரிவித்துள்ளனர்.
அவசரநிலை அறிவிப்பு
லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத் தீ குறித்து ஆய்வு செய்வதற்காக, அதிபர் ஜோ பைடன், கலிபோர்னியா சென்றுள்ளார். சாண்டா மோனிகா பகுதிக்குத் சென்ற அவருக்கு, அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து, காட்டுத் தீ அவசர நிலையை ஜோ பைடன் அறிவித்தார். முன்னதாக, தன் இத்தாலி சுற்றுப் பயணத்தையும் பைடன் ரத்து செய்தார். இதற்கிடையே, பல ஹாலிவுட் ஸ்டூடியோக்கள், சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுடைய படப்பிடிப்புகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
நீடிக்கும் காட்டுத் தீ!
கலிபோர்னியாவில் காட்டுத் தீ அடிக்கடி ஏற்படும். ஆனால், இந்த ஆண்டு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. வெப்பநிலை உயர்வு மற்றும் பருவநிலை மாறுபாடு மற்றும் மழையளவு குறைவு போன்றவை காரணமாக காட்டுத் தீ மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதைத் தவிர, வறண்ட வானிலை நிலவுவதும், பலத்த காற்று வீசுவதும், நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இதனால், காட்டுத் தீ மேலும் சில நாட்களுக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும் என, கூறப்படுகிறது.