| ADDED : நவ 04, 2024 03:22 AM
வாஷிங்டன்: அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகளால் பிரிந்திருந்த, மெக்சிகோவைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் சந்தித்தபோது கட்டியணைத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். வட அமெரிக்காவில் மெக்சிகோ வழியாக பல நாடுகளைச் சேர்ந்த அகதிகள், அமெரிக்காவுக்கு நுழைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இரு நாட்டு எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.புதிதாக அறிவிக்கப்பட்ட குடியேற்றக் கொள்கையால், மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா வந்து குடியேற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இதனால், ஏற்கனவே மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு குடி வந்தவர்கள், மெக்சிகோவில் வசிக்கும் உறவினர்களை சந்திக்க முடியாத சூழல் நிலவியது. இந்நிலையில், நாளை அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், புலம்பெயர்ந்தோர் நலக்குழுவின் முயற்சியால், இரு நாட்டு உறவினர்களும் சில நிமிடங்கள் சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டனர். இதன்படி, மெக்சிகோவில் ரியோ கிராண்டே எல்லை அருகே, இரு நாட்டு உறவினர்களும் நேற்று சந்தித்துக் கொண்டனர். இரு தரப்பிலும் உள்ள 200க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அப்போது சந்தித்துப் பேசினர்.பெரியவர்கள், குழந்தைகள் என ஒருவருக்கொருவர் கட்டியணைத்து உணர்ச்சி பொங்க அளவளாவி மகிழ்ந்தனர். கண்ணீர் மல்கும் உணர்ச்சி போராட்டங்களும் அப்போது அரங்கேறின. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த புலம்பெயர்ந்தோர் நலக்குழுவின் இயக்குனர் பெர்னாண்டோ கார்சியோ கூறுகையில், ''நாடு கடத்தல் கொள்கை, எல்லைக் கொள்கை, குடியேற்றக் கொள்கை போன்றவவை இரு தரப்பிலும் வசிக்கும் குடும்பங்களை ஆழமாக பாதிக்கிறது.''இதைத் தடுக்க அவ்வப்போது இதுபோன்ற சந்திப்புகள் நடத்தப்பட வேண்டும். அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், இதுபோன்ற சந்திப்புகள் தொடரும்,'' என்றார்.