இந்தோனேஷியா மசூதியில் குண்டுவெடிப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் 54 பேர் காயம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஜகார்தா: இந்தோனேஷியாவில், பள்ளி வளாகத்தில் உள்ள மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் என, 54 பேர் காயமடைந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், வடக்கு ஜகார்தாவின் கெலாபா காடிங் பகுதியில் உள்ள கடற்படை தளத்தில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் உள்ள மசூதியில், நேற்று மதியம் தொழுகைக்காக பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் கூடியிருந்தனர். அப்போது, மசூதியில் உள்ள, 'ஸ்பீக்கர்' அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்து சிதறியதில், 54 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் இருந்து ரிமோட் கன்ட்ரோல், வெடி தயாரிக்க பயன்படும் பொருட்கள், துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன. இச்சம்பவத்தில் அதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களால் அவமானப்படுத்தப்பட்டதால், இந்த செயலில் அவர் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த மாணவர் தனியாக செயல்பட்டாரா அல்லது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.