உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போதைக்கு எதிராக பிரேசில் போலீசார் சாட்டை கடத்தல்காரர்களை சுட்டதில் 64 பேர் பலி

போதைக்கு எதிராக பிரேசில் போலீசார் சாட்டை கடத்தல்காரர்களை சுட்டதில் 64 பேர் பலி

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை ஒடுக் க போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில், ரியோ டி ஜெனிரோ நகரம் ரத்தக்களரியாக மாறியது. இந்த அதிரடி நடவடிக்கையில், நான்கு போலீசார் உட்பட, 64 பேர் கொல்லப்பட்டனர். தென் அமெரிக்க நாடான பிரேசிலில், போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ' கொமாண்டோ வெர்மெல்ஹோ' என்ற கடத்தல் கும்பல் இதில் பிரதானமாக செயல்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து மாநில போலீஸ் படை, ராணுவம் மற்றும் சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த 2,500 பேர், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் நேற்று முன்தினம் இறங்கினர். அவர்கள் காம்ப்ளெக்ஸோ டோ அலெமோ மற்றும் பென்ஹா உள்ளிட்ட இடங்களில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர். அப்போது, கடத்தல் கும்பல் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், ' ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் வாயிலாக கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். சாலைகளை மறித்து, வாகனங்களைத் தீயிட்டு கொளுத்தியதால் நகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தீப்பிழம்பும், புகை மூட்டமுமாக காணப்பட்டது. இதையடுத்து முக்கிய சாலைகள் மூடப்பட்டன. இதற்கு போலீசார் பதிலடி கொடுத்தனர். இதனால், அந்தப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. அந்தப் பகுதியில் உள்ள 46 பள்ளிகள் மூடப்பட்டன. ரியோ பல்கலைக்கழகம் வகுப்புகளை ரத்து செய்தது. மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்த நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 60 பேர் உயிரிழந்தனர்; நான்கு போலீசாரும் உயிரிழந்தனர். சண்டை தணிந்த பிறகு, சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஏராளமான ஆண்களைச் சுற்றி வளைத்து பிடித்தனர். கொமாண்டோ வெர்மெல்ஹோ கும்பல் மீதான ஓரா ஆண்டாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தே இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அடுத்த வாரம், பிரேசிலில் பருவநிலை மாறுபாடு தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீது போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை