நியூயார்க் : ''இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னையில், 75 சதவீதம் தீர்வு காணப்பட்டது என்று நான் சொன்னது, எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கி கொள்வதில் மட்டுமே,'' என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.கிழக்கு லடாக்கில், 2020 மே மாதத்தில் சீன படைகள் அத்துமீறி நுழைய முயன்றன. இதை நம் படைகள் தடுத்து நிறுத்தின. எல்லையில் இரு நாட்டு படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், இரு தரப்பிலும் பல வீரர்கள் உயிரிழந்தனர்.இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பல சுற்று பேச்சுகளைத் தொடர்ந்து, எல்லையில் சில இடங்களில் இருந்து இரு நாட்டு படைகளும் விலக்கி கொள்ளப்பட்டன. அதே நேரத்தில் மேலும் சில இடங்களில் படைகள் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளன.இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை தொடர்பாக சமீபத்தில் கருத்து தெரிவித்த, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், எல்லைப் பிரச்னை தொடர்பான பேச்சில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், 75 சதவீத படைகள் திரும்பப் பெறப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஆசிய கொள்கை சொசைட்டி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் இது குறித்த கேள்விக்கு அவர் அளித்த விளக்கம்:நான், 75 சதவீத முன்னேற்றம் என்று குறிப்பிட்டது, எல்லையில் இருந்து படைகள் திரும்பப் பெறும் பிரச்னையில் மட்டுமே. மீதமுள்ள படைகளையும் விலக்கி கொள்வது தொடர்பாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.சீனாவுடன் எல்லை பிரச்னை தொடர்பாக மிக கடினமான வரலாற்றை இந்தியா சந்தித்து வந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தும், 2020ல், அவற்றை மீறி, சீனா தன் படைகளை அனுப்பியது. இதனால், மோதல் ஏற்பட்டு, பல உயிர்களை இரு தரப்பும் இழக்க நேரிட்டது.இதுவே, இரு நாட்டு உறவுகளில் பெரும் பாதிப்பை, விரிசலை ஏற்படுத்தியது.நான் எல்லைப் பிரச்னையில், 75 சதவீதம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டது, படைகளை திரும்பப் பெறும் பிரச்னையில் மட்டுமே. அது இரு நாட்டுக்கு இடையேயான எல்லைப் பிரச்னையில் ஒரு பகுதியே. முதலில் படைகள் எல்லையில் இருந்து திரும்ப வேண்டும். எல்லையில் அமைதி ஏற்பட வேண்டும். அதன்பிறகே, இரு தரப்பு உறவுகள், எல்லைப் பிரச்னை தொடர்பாக பேசப்படும்.இரு நாடுகளுக்கும் இடையேயான உறவே, ஆசியா மற்றும் உலகுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.