காபூல்: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான உறவு தற்போது மோசமான கட்டத்தில் உள்ளது. எல்லைப் பகுதிகள் மூடப்பட்டதால், தன் வர்த்தக நடவடிக்கைகளுக்காக, இந்தியா மற்றும் ஈரானை நம்பியுள்ளது ஆப்கானிஸ்தான். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் வழியாக சர்வதேச சந்தைகளை அணுகி வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளிடையேயான உறவு தற்போது மோசமான கட்டத்தில் உள்ளது. இதையடுத்து, இரு நாட்டுக்கு இடையேயான எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, தன் வர்த்தக நடவடிக்கைகளை, இந்தியா மற்றும் ஈரான் வழியாக திருப்பும் முயற்சியில் ஆப்கானிஸ்தான் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் உடனான எல்லை ஒரு மாதமாக மூடப்பட்டுள்ளதால், ஆப்கன் வர்த்தகர்களுக்கு, குறிப்பாக அழுகக்கூடிய பொருட்களால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாதத்திற்கு 1,760 கோடி ரூபாய் வரை இழப்பை சந்திப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இது, ஆப்கன் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பாகி-ஸ்தானுடனான ஒப்பந்தங்களை முடித்துக் கொண்டு மாற்று வழிகளுக்கு மாறும்படி, வர்த்தகர்களுக்கு ஆப்கன் மூன்று மாத காலக்கெடு விதித்துள்ளது. மேலும், தரமற்ற பொருட்கள் என கூறி மருந்துகள் உள்ளிட்ட சில பொருட்களை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரான் மற்றும் இந்தியாவின் பக்கம் தன் பார்வையை ஆப்கானிஸ்தான் திருப்பியுள்ளது. இதற்கேற்ப, ஏற்கனவே, ஆப்கன் சரக்குகளுக்கு குறிப்பிடத்தக்க வகையில் ஈரான் தன் துறைமுக பயன்பாடுகளுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது. துறைமுக கட்டணங்களில் 30 சதவீதம் குறைப்பு, சேமிப்பு கிடங்கு கட்டணங்களில் 75 சதவீதம் மற்றும் கப்பல் நிறுத்தும் கட்டணங்களில் 55 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், தன் அண்டை நாடான ஈரானின் சபஹார் துறைமுகம் வாயிலாக தன் வர்த்தகத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, ஆப்கன் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான வர்த்தக தடத்தை விரிவுபடுத்தும் நோக்குடன் ஈரானின் சபஹார் துறைமுகத்தில் உள்ள முக்கிய முனையங்களை இந்தியா நிர்வகித்து வருகிறது. இதையடுத்து, மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் வழியாகவும், இந்தியாவின் ஆதரவுடன் ஈரானின் சபஹார் துறைமுகத்தின் வழியாகவும் தன் வர்த்தகத்தை திருப்புவதற்கான முயற்சியை ஆப்கன் தீவிரப்படுத்தியுள்ளது. இது உலக நாடுகளுடனான தன் வர்த்தகத்தை இணைப்பதற்கான வழி ஆப்கனுக்கு கிடைத்துள்ளது. அமெரிக்கா, சீனாவுக்கு பின் பாகிஸ்தானின் மூன்றாவது பெரிய சந்தையாக ஆப்கானிஸ்தான் உள்ளது. சிமென்ட், மருந்துகள், உணவுப்பொருட்கள் மற்றும் ஜவுளி உட்பட ஆண்டுக்கு 17,600 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது ஆப்கனின் முடிவால், பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. கராச்சி போன்ற பாகிஸ்தான் துறைமுகங்கள் வழியாக காபூலுக்குச் செல்லும் மத்திய ஆசிய மற்றும் ஐரோப்பிய சரக்குகளில் இருந்து பாகிஸ்தானுக்குக் கிடைத்த கட்டண வருமானம் இப்போது குறையும். ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த மாதம் டில்லிக்கு வந்திருந்த ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி, இந்திய முதலீட்டாளர்களை தங்கள் நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், டில்லி - காபூல், அமிர்தசரஸ் - காபூல் மற்றும் அமிர்தசரஸ் - கந்தஹார் இடையே சரக்கு விமான போக்குவரத்தை துவங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.