உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 9 மாதத்துக்கு பின்! பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்: டிராகன் விண்கலம் விண்வெளிக்கு சென்றது

9 மாதத்துக்கு பின்! பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்: டிராகன் விண்கலம் விண்வெளிக்கு சென்றது

வாஷிங்டன்: விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், 59, மற்றும் புட்ச் வில்மோர், 62, பூமிக்கு திரும்புகின்றனர். இவர்களை அழைத்து வருவதற்காக செலுத்தப்பட்ட 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் டிராகன் விண்கலம், விண்வெளிக்கு சென்றடைந்துள்ளது.அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி, சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முதல் விண்கலமான, 'போயிங்' நிறுவனத்தின், 'ஸ்டார்லைனர்' வாயிலாக இவர்கள் சென்றனர். அங்கு எட்டு நாட்கள் ஆய்வு பணிகளில் ஈடுபட திட்டமிட்டனர். இந்நிலையில், ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அதன் வாயிலாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை.இதை தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அவர்களை பூமிக்கு அழைத்து வர முடியவில்லை. இந்நிலையில், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ்எக்ஸ்' விண்வெளி நிறுவனத்தின் வாயிலாக மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.இதன்படி, அந்த நிறுவனத்தின் 'பால்கன் -- 9' ராக்கெட் உடன், 'டிராகன்' எனப்படும் வீரர்கள் பயணிக்கும் விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம், விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தை நேற்று வெற்றிகரமாக சென்றடைந்தது. டிராகன் விண்கலத்திலிருந்து வந்தவர்களை, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கட்டியணைத்து வரவேற்றனர். இருதரப்பினரும் விண்வெளியில் உற்சாகமாக தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதையடுத்து, வரும் 19ம் தேதிக்குள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவர் என்று கூறப்படுகிறது.இந்த விண்கலத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆனி மெக்லின், நிகோல் ஏயர்ஸ், ஜப்பானின் தகுயா ஒனிஷி, ரஷ்யாவின் கிரில் பெஸ்கோவ் என, நான்கு விண்வெளி வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.டிராகன் விண்கலத்தின் வாயிலாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரைத் தவிர, கடந்த சில மாதங்களாக அங்கு பணியாற்றி வரும், அமெரிக்க வீரர் நிக் ஹேக், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் பூமிக்கு திரும்புகின்றனர்.எட்டு நாட்களுக்கு மட்டுமே திட்டமிட்ட நிலையில், விண்வெளியில் ஒன்பது மாதங்களாக சுனிதா மற்றும் வில்மோர் சிக்கியிருந்தனர். உடை, உணவு போன்றவை எடுத்துச் செல்லாததுடன், மனதளவில் தயாராக இல்லாமல் இருந்தனர். இதனால், இருவரின் உடல்நலம் குறித்த கவலை ஏற்பட்டது. ஆனாலும் அவர்கள் தங்களுடைய பணியைத் தொடர்ந்தனர்.வழக்கமாக, சர்வதேச விண்வெளி மையத்தில் அதிகபட்சம் ஆறு மாதங்கள் மட்டுமே வீரர்கள் தங்க வைக்கப்படுவர். அதன்படி, சுழற்சி முறையில் வீரர்கள் மாற்றி மாற்றி அனுப்பப்படுவர்.நாசாவின் பிராங்க் ரூபியோ, 2023ல் அதிகபட்சம், 371 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்தார். ரஷ்யாவைச் சேர்ந்த வேலரி போலியகோவ், மிர் விண்வெளி மையத்தில், 437 நாட்கள் தங்கியிருந்ததே சாதனையாகும்.

எவ்வளவு பணம் கிடைக்கும்?

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மர், அமெரிக்க அரசின் ஊழியர்களுக்கான பொது பட்டியலில் மிகவும் உயர்ந்த நிலையான, ஜி.எஸ்., - 15 என்ற நிலையில் உள்ளனர். தற்போது பூமிக்கு திரும்பும் அவர்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இது குறித்து ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனை கேடி கோலமன் கூறியுள்ளதாவது:விண்வெளிக்கு செல்வதால், தனியாக சிறப்பு ஊதியம் எதுவும் கிடையாது. பூமியில் வேலை செய்வதற்கு பதிலாக விண்வெளியில் பணியாற்ற வேண்டும். அதே நேரத்தில், தற்செயல் படியாக, ஒரு நாளைக்கு, 347 ரூபாய் வழங்கப்படும்.கடந்த 2010 - 11ல், 159 நாட்கள் விண்வெளியில் இருந்தேன். அதற்கு, 55,000 ரூபாய் தற்செயல் படி கிடைத்தது. தற்போது இவர்கள் இருவரும், 287 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளனர். அதற்காக, இருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.அவர்கள் இருவரும் விண்வெளியில் சிக்கவில்லை, அங்கு வேலை பார்த்தனர் என்றே நாசா கூறுகிறது. இருவரும், ஜி.எஸ்., - 15 என்ற அந்தஸ்தில் உள்ளனர். இந்த அந்தஸ்துக்கான ஆண்டு சம்பளம், 1.08 முதல் 1.41 கோடி ரூபாய்.ஒன்பது மாதங்களாக அவர்கள் விண்வெளியில் இருந்துள்ளனர். தற்செயல் படி, சம்பளம் சேர்த்து, அவர்களுக்கு 82 லட்சம் ரூபாயில் இருந்து, 1.06 கோடி ரூபாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை