பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் தீர்வு காண ஒப்பந்தம் கையெழுத்து
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீரில், பாகிஸ்தான் அரசின் தவறான நிர்வாகம், ரேஷனில் கோதுமை மற்றும் மின்சாரம் வழங்குவதில் குளறுபடி, ஆளும் கட்சியினருக்கு அதிகாரிகளின் வரம்பற்ற சலுகைகள் ஆகியவற்றை கண்டித்து, அங்கு வசிக்கும் மக்கள் நீண்ட நாட்களாக போராடி வந்தனர். கடந்த செப்டம்பர் 29ம் தேதி போராட்டங்கள் தீவிரமடைந்ததையடுத்து, வன்முறை வெடித்தது. இதில், 10 பேர் கொல்லப்பட்டனர். போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அனுப்பிய உயர்மட்ட குழு, போராட்டக்காரர்களின் பிரதிநிதி குழுவுடன் இரண்டு நாட்கள் பேச்சு நடத்தியது. இதைத்தொடர்ந்து, போராட்டக்காரர்களின் 38 அம்ச கோரிக்கைகளில், 25 அம்சங்களுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முக்கிய அம்சங்கள்: • வன்முறையில் கொல்லப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் • ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மின்சார அமைப்பை மேம்படுத்துவதற்கான நிதியை, பாகிஸ்தான் மத்திய அரசு வழங்கும் • ஆக்கிரமிப்பு காஷ்மீர் அமைச்சரவையின் அளவை, 20 அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்களாக குறைக்க முடிவு • நிர்வாகத்தை எளிமையாக்க சில துறைகள் இணைக்கப்படும் • இலவச சிகிச்சைக்கு மருத்துவ அட்டைகள் வழங்கப்படும். சி.டி., - எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரங்களை மாவட்டந்தோறும் வழங்கப்படும் • முசாராபாத் மற்றும் பூஞ்ச் பகுதிகளுக்கு கூடுதலாக இரண்டு இடைநிலை மற்றும் இரண்டாம் நிலை கல்வி வாரியங்கள் அமைக்கப்படும். மேலும், இந்த ஒப்பந்தத்தை மேற்பார்வையிட்டு செயல்படுத்த ஒரு கண்காணிப்பு மற்றும் செயல்படுத்த குழு ஒன்று அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து, போராட்டம் முடிவுக்கு வந்தது. சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதாக பாக்., பார்லிமென்ட் விவகாரங்களுக்கான அமைச்சர் தாரிக் பசல் சவுத்ரி தெரிவித்துள்ளார்.