உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா பிரதமர் பதவிக்கு இந்தியர் போட்டி கன்னடத்தில் பேசி ஆதரவு திரட்டினார்

கனடா பிரதமர் பதவிக்கு இந்தியர் போட்டி கன்னடத்தில் பேசி ஆதரவு திரட்டினார்

ஒட்டாவா, கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியான சந்திரா ஆர்யா, 62, வேட்புமனு தாக்கலுக்கு பின் தன் தாய்மொழியான கன்னடத்தில் பேசி ஆதரவு திரட்டினார். வட அமெரிக்க நாடான கனடாவில், லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. அவரது ஆட்சியில் ஊழல் அதிகரித்ததாக குற்றச்சாட்டுகள் குவிந்தன.

ராஜினாமா

சொந்த கட்சிக்குள்ளேயே, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த சூழலில், லிபரல் கட்சி தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவி யில் இருந்தும் விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.ராஜினாமா செய்தாலும், அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை பதவியில் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், அக்கட்சி சார்பில் கனடா பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்பதால், கட்சித் தலைமை பொறுப்பை ஏற்க அங்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்திய வம்சாவளியும், அந்நாட்டு எம்.பி.,யுமான சந்திரா ஆர்யா உள்ளிட்டோர் கட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். இந்த சூழலில், தான் போட்டியிடுவதை உறுதி செய்யும் வகையில், பிரதமர் பதவிக்காக அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர், அந்நாட்டு சபையில், தன் தாய்மொழியான கன்னடத்தில் பேசி அசத்தினார். அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் சந்திரா ஆர்யா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:நாடு ஒரு கடுமையான புயலை எதிர்கொள்கிறது. பல கனடியர்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், மலிவான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். உழைக்கும் நடுத்தர வர்க்கத்தினர் போராடி வருகின்றனர்.

விவேகம்

பல குடும்பங்கள் நேரடியாக வறுமையில் மூழ்கியுள்ளன. கனடாவின் ஏற்றுமதி மற்றும் முதலீடுகளுக்கு, இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க வளர்ந்து வரும் சந்தையாக உள்ளது. இதனால், நம் தேவைகள் நிச்சயம் பூர்த்தியாகும். பெரிய முடிவுகளை எடுக்க பயப்படாத தலைமைக்கு கனடா தகுதியானது. விவேகம் மற்றும் நடைமுறைவாதத்தை என் வழிகாட்டும் கொள்கைகளாக வைத்து, பிரதமர் பதவி வேட்பாளராக போட்டியிடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

காலிஸ்தானுக்கு எதிரானவர்

கர்நாடகாவின் தும்கூரு மாவட்டத்தை பூர்வீகமாக உடைய சந்திரா ஆர்யா, கனடா செல்லும் முன் தார்வாடில் எம்.பி.ஏ., படிப்பை முடித்தார். கனடாவின் ஒட்டாவாவிற்கு, 20 ஆண்டுகளுக்கு முன் பொறியாளர் பணிக்கு சென்ற சந்திரா ஆர்யா, படிப்படியாக உயர்ந்து அங்கு தொழிலதிபர் ஆனார். பின்னர் எம்.பி.,யான அவர், தன் தாய்மொழியான கன்னடத்தில் அவ்வப்போது பேசி அங்குள்ள இந்தியர்களை கவர்ந்து வருகிறார். மறைந்த இந்திய பிரதமர் இந்திராவின் படுகொலையைக் கொண்டாடியதற்காகவும், கனடாவில் ஹிந்து கோவில்கள் அவமதிக்கப்பட்டதற்கும், காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் சந்திரா ஆர்யா. எனவே, அவருக்கு அங்கு இந்தியர்களின் ஆதரவு பெரும் வகையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !