அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல்!
ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை, ஏவுகணையால் தாக்கியதாக ஈரான் அரசு ஊடகங்கள் வீடியோ வெளியிட்டுள்ளன. இது முவாபக் சால்தி விமான தளம் அல்லது அச்ராக் பகுதியில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோர்டானில் உள்ள இந்த தளம் அமெரிக்க விமா னப் படையின் முக்கிய மையமாக செயல்படுகிறது. இங்கு, 'தாட்' ஏவுகணை பாதுகாப்பு அமைப்புடன் தொடர்புடைய ரேடார் அமைப்புகள் இருந்தன. முந்தைய தாக்குதல்களில் இந்த ரேடார் அமைப்பு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போதைய தாக்குதலை ஜோர்டானோ, அமெரிக்காவோ உறுதிப்படுத்தவில்லை. மேலும் ஒரு கப்பல் புறப்பட்டது! அமெரிக்கா தன் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை மேற்காசியா நோக்கி அனுப்பியுள்ளது. 'யு.எஸ்.எஸ்., ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ்' என்ற இந்த போர்க்கப்பல், நார்போக் தளத்திலிருந்து புறப்பட்டுள்ளது. ஒரு லட்சம் டன் எடையுடைய இந்த கப்பல், 70 போர் விமானங்கள் வரை சுமந்து செல்லும் திறன் கொண்டது. ஏற்கனவே யு.எஸ்.எஸ்.ஆப்ரஹாம் லிங்கன் மற்றும் யு.எஸ்.எஸ்.ஜெரால்ட் ஆர்.போர்டு ஆகிய கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஈரானின் தாக்குதலில் ஜெரால்ட் போர்டு போர்க் கப்பல் சேதமடைந்ததையடுத்து, மாற்று ஏற்பாடாக, ஜார்ஜ் எச். டபிள்யூ.புஷ் கப்பல் அனுப்பப்பட்டுள்ளது. ஏவுகணையை வீசி ஈரான் கிண்டல்! ஈரானின் ஏவுகணை அமைப்புகளை முற்றிலும் அழித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசிய சில நிமிடங்களுக்குள், இஸ்ரேல் நோக்கி புதிய ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தியது. இதனால், இஸ்ரேலில் வான்பாதுகாப்பு எச்சரிக்கை மணிகள் ஒலித்தன. இஸ்ரேல் முழுதும் ஏவுகணை எச்சரிக்கை சத்தம் கேட்ட நிலையில், மும்பையில் உள்ள ஈரான் துணை துாதரகம், 'இப்போது இஸ்ரேலில் ஒலிக்கும் சைரன்கள், நிச்சயம் செவ்வாய் கிரகத்திலிருந்து வரும் வானியல் மழையாக தான் இருக்க வேண்டும்' என்று கிண்டலுடன் பதிவிட்டுள்ளது.