ஆஸி., துப்பாக்கிச்சூட்டில் போலீசார் 2 பேர் பலி: பொதுமக்கள் நடமாட வேண்டாம் என எச்சரிக்கை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
விக்டோரியா: ஆஸ்திரேலியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீசார் 2 பேர் கொல்லப்பட்டனர். பாலியல் வழக்கில் வாரண்ட் வினியோகிக்க சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு;மெல்போர்ன் அருகில் உள்ள விக்டோரியா பகுதியில் போரேபுன்கா என்ற சிறிய நகரம் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட வாரண்ட் ஒன்றை வழங்க அந்நாட்டு போலீசார் சென்றனர். அப்போது எங்கிருந்தோ மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் வாரண்ட் நகலை ஒட்டச் சென்ற போலீசாரின் மீது குண்டு பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே 2 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை அங்குள்ளோர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கியால் சுட்ட நபர் எங்கிருந்து சுட்டுள்ளார் என்பது தெரிய வில்லை. அவரை தேடும் பணியில் போலீசார் குழுக்களாக இறங்கி இருக்கின்றனர். துப்பாக்கியுடன் மர்ம நபர் காணப்படுவதால் பொது மக்கள் யாரும் வீடுகளை விட்டு பொது வெளியில் நடமாட வேண்டாம் என்று போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சம்பவ பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் இருந்து யாரும் வெளியேற வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக போலீஸ் உயரதிகாரிகள் கூறி இருக்கின்றனர்.