உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியருக்கு எதிராக கருத்து ஆஸி., பிரதமர் கண்டிப்பு

இந்தியருக்கு எதிராக கருத்து ஆஸி., பிரதமர் கண்டிப்பு

சிட்னி:'ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள், தொழிலாளர் கட்சிக்கு ஓட்டுப்போடுவதால் அவர்கள் இங்கே அதிக அளவு அனுமதிக்கப் படுகின்றனர்' என, ஆஸ்திரேலிய எம்.பி., ஜெசிந்தா கூறியதற்கு மன்னிப்பு கேட்கும்படி, அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ் வலியுறுத்தினார். ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக 'மார்ச் பார் ஆஸ்திரேலியா' என்ற போராட்டம் நாடு முழுதும் கடந்த ஆகஸ்ட் 31ல் நடந்தது. இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் குறிப்பாக இந்தியர்களின் புலம்பெயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில், அந்நாட்டின் விடுதலை கட்சியைச் சேர்ந்த எம்.பி., ஜெசிந்தா நம்பிஜின்பா பிரைஸ், சமீபத்தில் ரேடியோ ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்திய புலம்பெயர்வோர்கள் குறித்து அதிகம் கவலை ஏற்பட காரணம், அவர்கள் அதிக எண்ணிக்கையில் ஆஸ்திரேலியா வர அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கு வரும் அவர்கள் பிரதமர் அல்பனீஸ் கட்சிக்கு ஓட்டு போடுகின்றனர், என்றார். இதற்கு இந்திய வம்சாவளியினர் இடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், எம்.பி.,யின் கருத்திற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “எம்.பி., ஜெசிந்தாவின் கருத்து உண்மை கிடையாது. அவரது கருத்தால் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் புண்பட்டுள்ளனர். ஜெசிந்தாவின் கருத்தை அவரது சொந்த கட்சியினரே ஏற்கவில்லை. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றார். ஆஸ்திரேலிய அரசின் புள்ளிவிபரப்படி அங்கு 8.45 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ