| ADDED : டிச 26, 2025 01:45 AM
அபுஜா: நைஜீரியாவில் மசூதி ஒன்றில் தொழுகையின்போது குண்டு வெடித்ததில் 7 பேர் பலியாகினர்; 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், போகோ ஹராம், ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், போர்னோ மாகாணத்தில் மைதுகுரி பகுதியில் உள்ள மசூதி ஒன்றில், நேற்று முன்தினம் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. தொழுகை நடந்து கொண்டிருந்தபோது, மசூதிக்குள் திடீரென, பலத்த சத்தத்துடன், குண்டு வெடித்தது. இதில், 7 பேர் பலியாகினர். 35 பேர் காயம் அடைந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் தற்கொலைப் படை தாக்குதலுக்கான கவச உடைகள் சிதறிக்கிடந்ததால், இது பயங்கரவாத தாக்குதல் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. ஆனால், இது போகோ ஹராம் பயங்கரவாதிகளின் திட்டமாகவே இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.