உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் மிரட்டல்களுக்கு இடையே கனடாவுக்கு ஏப்., 28ல் தேர்தல்

டிரம்ப் மிரட்டல்களுக்கு இடையே கனடாவுக்கு ஏப்., 28ல் தேர்தல்

ஒட்டாவா : அமெரிக்காவின் மற்றொரு மாகாணமாக கனடாவை பிரிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வரும் நிலையில், பார்லிமென்டை கலைத்து, ஏப்., 28ல் தேர்தலை நடத்துவதாக கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.வட அமெரிக்க நாடான கனடாவில் இந்தாண்டு அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கிடையே, மக்கள் செல்வாக்கு சரிந்ததால், பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, ஆளும் லிபரல் கட்சியில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.கட்சியின் பெரும்பான்மையினர் ஆதரவுடன், இம்மாதம் 9ம் தேதி, கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய வங்கியின் முன்னாள் கவர்னரான அவர், சிறந்த பொருளாதார நிபுணராகக் கருதப்படுகிறார்.அமெரிக்க அதிபராக, கடந்த ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், கனடாவுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்துவதாக அறிவித்தார். மேலும், அதிக வரிகளை விதிப்பதாகவும் அறிவித்தார். இதற்கெல்லாம் ஒரு படி மேலாக, கனடாவை, அமெரிக்காவின், 51வது மாகாணமாக சேர்க்கப் போவதாக கூறி வந்தார். ஜஸ்டின் ட்ரூடோவை, கனடா மாகாணத்தின் கவர்னர் என்றே அழைத்து வந்தார்.அமெரிக்காவின் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், மார்க் கார்னி பிரதமராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து லிபரல் கட்சிக்கான செல்வாக்கு மளமளவென உயர்ந்தது. பார்லிமென்டுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டது.இந்நிலையில், கனடாவுக்கும் மன்னராக உள்ள, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியான, கவர்னர் ஜெனரல் மேரி சைமனை, பிரதமர் மார்க் கார்னி நேற்று சந்தித்தார். பார்லிமென்டை கலைப்பதற்கான பரிந்துரையை அவர் அளித்தார். மேலும், பார்லிமென்டுக்கு முன்னதாகவே, வரும், ஏப்., 28ல் தேர்தல் நடத்தப்படும் என்றும் பிரதமர் கார்னி நேற்று அறிவித்துள்ளார். கடைசியாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில், எதிர்க்கட்சியான பழமைவாத கட்சியைவிட, ஆளும் லிபரல் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது.

டிரம்பின் வரி விதிப்புகளை சமாளிக்கணும்!

சமூக வலைதளத்தில் மார்க் கார்னி வெளியிட்டுள்ள அறிக்கை: எங்கள் புதிய நடுத்தர வர்க்க வரி குறைப்பு, கனடா மக்கள் தாங்கள் சம்பாதிப்பதில் அதிகமானவற்றை சேமித்து வைக்கவும், அதிபர் டிரம்பின் வரிவிதிப்புகளை எதிர்கொள்ள வலுவான கனடாவை உருவாக்கவும் உதவும்.நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் அதிக பயனடைவார்கள்.G7ல் நாம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அதிபர் டிரம்பின் வரிவிதிப்புகளை நாம் சமாளிக்க வேண்டும். இதனை சமாளிக்கும் வகையில் நமது நாட்டை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்து கனடா மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
மார் 24, 2025 03:46

சீக்கியர்களின் தீவிரவாத பிரிவின் ஆதரவில் மறுபடியும் பதவிக்கு வந்தால் கனடா ஒரு தீவிரவாத [ஆதரவு?] நாடாவதத்தைத்தவிர வேறு வழியில்லை..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை