இத்தாலியில் கார் விபத்து: ஹோட்டல் அதிபர், மனைவி பலி
ரோம்: இத்தாலி நாட்டுக்கு சுற்றுலா சென்ற மஹாராஷ்டிர மாநில ஹோட்டல் அதிபர், மனைவியுடன் கார் விபத்தில் உயிரிழந்தார். மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள குல்ஷன் பிளாசா என்ற ஹோட்டலின் உரிமையாளர் ஜாவேத் அக்தர், 57. அவர் மனைவி நாத்ரா, மகள்கள் அர்சூ, 22, ஷிபா, 18, மகன் ஜாசெல், 15, ஆகியோருடன் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி மற்றும் பிரான்சுக்கு 10 நாள் சுற்றுலா சென்றிருந்தார். இத்தாலியின் க்ரோசெட்டோ நகருக்கு சென்றிருந்தபோது, அவர்கள் பயணித்த 9 இருக்கைகள் கொண்ட கார் விபத்துக்குள்ளானது. இதில் ஜாவேத் அக்தரும், அவரது மனைவியும் உயிரிழந்தனர். அவர்களது மூன்று பிள்ளைகளும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் மூத்த மகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. பா.ஜ.,வைச் சேர்ந்த மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தேவையான உதவிகளைச் செய்து வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் உடல் களை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சியை, இத்தாலியில் உள்ள நம் நாட்டு துாதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.