| ADDED : ஜன 02, 2026 08:17 PM
இஸ்லாமாபாத்: பலுசிஸ்தானில் சீனா தமது ராணுவப்படைகளை நிலை நிறுத்தக்கூடும் வாய்ப்புகள் உள்ளதால், இந்த விவகாரத்தில் இந்தியா உடனடியாக தலையிட வேண்டும் என்று பலுச் தலைவர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.பாகிஸ்தானின் அடக்குமுறைக்கு ஆளாகி வரும் பலுசிஸ்தான் மக்கள், இந்தியாவின் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாராட்டியவர்கள். அவர்கள், பாக். பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இந் நிலையில் பலுச் பிரபல தலைவர் மிர்யார் பலூச், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது; பலுசிஸ்தான் பல காலங்களாகவே பாகிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் அடக்குமுறையை எதிர்கொண்டு வருகிறது. அடுத்த சில மாதங்களுக்குள் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் சீனா தமது ராணுவ படைகளை நிலை நிறுத்தக்கூடும். இது அப்பகுதிக்கும், இந்தியாவுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறி உள்ளது. இந்தியாவுக்கும், பலுசிஸ்தானுக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு தேவை. பாக். அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கவும், பிராந்திய இறையாண்மையை காக்கவும் இந்தியா உடனடியாக தலையிட வேண்டும். இவ்வாறு பலுச் பிரபல தலைவர் மிர்யார் பலுச் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.