அமெரிக்காவுக்கு விதித்த 24 சதவிகித கூடுதல் வரியை அதிபர்கள் சந்திப்புக்கு பின் நிறுத்தியது சீனா
பீஜிங்: அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 24 சதவீத கூடுதல் வரியை, ஓராண்டுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீனா அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் விவகாரத்தில், அமெரிக்கா - சீனா இடையே மோதல் ஏற்பட்டது. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி பொருட்களுக்கான வரிகளை அதிரடியாக உயர்த்தின. இது, வர்த்தக போர் பதற்றத்தை ஏற்படுத்தியது . ஒரு கட்டத்தில், இந்த வரி விதிப்பு இருதரப்பு வர்த்தகத்தை கடுமையாக சீர்குலைத்ததால், இருநாட்டு அதிபர்களும் பேச்சு நடத்தி வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக, கிழக்காசிய நாடான தென் கொரியாவில் கடந்த வாரம் நடந்த ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில், அமெரிக்காவுக்கு அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்கான தடையை ஓராண்டுக்கு நீக்கவும், சோயாபீன்ஸ் உள்ளிட்ட அமெரிக்க வேளாண் பொருட்களை அதிகளவில் கொள்முதல் செய்யவும் ஜின்பிங் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, 'சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரி, 57 சதவீதத்தில் இருந்து 47 ஆக குறைக்கப்படும்' என டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான 24 சதவீத கூடுதல் வரியையும் ஓராண்டுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீனா நேற்று அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க பொருட்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்டு வந்த 10 சதவீத வரி தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரு நாடுகளின் பொருளாதார ஒப்பந்தங்களின் அடிப்படையில், இந்த வரி நிறுத்தம் நவம்பர் 10 முதல் அமலுக்கு வரும் என்று சீன நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.