பிலிப்பைன்ஸ் படகு மீது சீன கப்பல் மோதல் தென்சீன கடல் பகுதியில் பதற்றம்
மணிலா: தென்சீன கடல் பகுதியில் சீன கப்பல், தங்களின் படகு மீது திட்டமிட்டு மோதியதாக பிலிப்பைன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. தென்சீன கடல் பகுதி அதிகளவில் மீன் வளம் மற்றும் எரிவாயு, எண்ணெய் போன்ற வளங்களை கொண்டுள்ளது. முக்கிய பொருளாதார ஆதாரமாக உள்ள இப்பகுதியை சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிற நாடுகள் உரிமை கோரி வருகின்றன. சீனா, முழு பகுதியையும் உரிமை கோருவதுடன், கடலோர காவல்படை கப்பல்கள் வாயிலாக மற்ற நாடுகளின் செயல்பாடுகளை தீவிரமாக தடுத்து வருகிறது. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் தி ஹேக்கில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றம், கடந்த 2016ல் அளித்த தீர்ப்பில், தென்சீன கடலில் உள்ள வளங்கள் மீதான சீனாவின் உரிமை கோரல்களுக்கு, சர்வதேச சட்டத்தில் எந்த அடிப்படையும் இல்லை என்று தெளிவாக கூறியது. இந்த தீர்ப்பை புறக்கணித்து, சீனா அதன் ஆதிக்கத்தை நிலைநாட்ட தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவு அருகில் நிறுத்தப்பட்டிருந்த, அந்நாட்டுக்கு சொந்தமான படகின் மீது, நேற்று சீன கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று திட்டமிட்டு, வேண்டுமென்றே மோதியதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிலிப்பைன்ஸ் கூறியதாவது: எங்களுக்கு சொந்தமான படகின் மீது, சீன கப்பல் வேண்டுமென்றே மோதியுள்ளது. இதில், படகின் பின்புறம் சேதமடைந்துள்ளது. இது அச்சுறுத்தும் தந்திரம் மட்டுமல்ல அத்துமீறலும் கூட; இத்தகைய அச்சுறுத்தலுக்கெல்லாம் பிலிப்பைன்ஸ் பயப்படாது. இவ்வாறு கூறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எங்களின் கப்பலை நோக்கி ஆபத்தான முறையில் வந்த பிலிப்பைன்ஸ் படகுக்கு, தொடர்ந்து பலமுறை எச்சரிக்கை விடுத்தோம். ' எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அந்த படகு, கப்பல் மீது மோதியது. இதற்கான முழு பொறுப்பும் பிலிப்பைன்சையே சேரும்' என, தெரிவித்துள்ளது. தென்சீன கடலுக்காக, பிலிப்பைன்ஸ், சீனாவைத் தவிர, புரூனே, இந்தோனேசியா, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் உரிமை கோருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது