உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 2,200 ஊழியர்களை விடுப்பில் அனுப்பும் டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

2,200 ஊழியர்களை விடுப்பில் அனுப்பும் டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

வாஷிங்டன் அமெரிக்க அரசின் யு.எஸ்.ஏ.ஐ.டி., எனப்படும் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை என்ற அமைப்பின் சார்பில் வெளிநாடுகளில் பணியாற்றும் 2,200 ஊழியர்களை, விடுமுறையில் செல்லும்படி அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு, அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20ம் தேதி பதவியேற்றார். அரசின் செலவினங்களை குறைப்பதற்காக, டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அரசுசாரா துறை ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார். அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்ட பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், இந்த துறையின் தலைவராக உள்ளார்.

வளர்ச்சிப்பணி

அமெரிக்க அரசு, பல நாடுகளுக்கு பல வகைகளில் நிதியுதவிகளை அளித்து வருகிறது. வளர்ச்சி பணிகள், மனிதாபிமான அடிப்படையில் என பல வகைகளில் நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. இதில் அந்தந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை, யு.எஸ்.ஏ.ஐ.டி., எனப்படும் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை என்ற அமைப்பு கண்காணிக்கிறது. இதற்காக வெளிநாடுகளில் இந்த அமைப்பின் சார்பில் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.இந்நிலையில், வெளிநாடுகளில் பணியாற்றும், 2,200 ஊழியர்களை உடனடியாக விடுமுறையில் செல்ல அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார். மேலும், 30 நாட்களுக்குள் நாடு திரும்பினால், அதற்கான செலவை அரசு ஏற்கும் என, உத்தரவில் கூறப்பட்டிருந்தது.இதைத் தவிர, இந்த அமைப்பின் செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்தியும், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை நிறுத்தவும், அதற்கான நிதியுதவிகளை நிறுத்தியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, வெளிநாடுகளில் பணியாற்றும் இந்த அமைப்பின் ஊழியர்கள் சார்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், 2,200 வெளிநாட்டு ஊழியர்களை விடுமுறையில் அனுப்பும் உத்தரவையும், 30 நாட்களில் நாடு திரும்ப வேண்டும் என்ற உத்தரவையும் நிறுத்தி வைத்துள்ளது.அதே நேரத்தில், அமைப்பின் செயல்பாடுகளை நிறுத்தும் அதிபரின் முடிவுகள் தொடர்பாக எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. ஏற்கனவே, 500க்கும் மேற்பட்ட இந்த அமைப்பின் ஊழியர்கள் விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.

கதி என்ன?

இதைத் தவிர, அமெரிக்காவில் பணியாற்றும், 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.இதற்கிடையே, வெளிநாடுகளில் இந்த அமைப்பால் மேற்கொள்ளப்படும் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதால், அந்த நாடுகளிலும் பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உதாரணத்துக்கு, ஆப்ரிக்க நாடான சூடானில் குடிநீர் வழங்கும் திட்டப்பணி நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி